வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி ஏறக்குறைய முடிவாகி விட்டதாக இன்று காலை செய்தி வெளியானது. தற்போது தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது. திருப்பூருக்கு பிரதமர் மோடி வரும்போது, அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனத்தெரிகிறது.

இந்த கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கும் எனத்தெரிகிறது. பாமக கட்சியுடனும் அதிமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.