தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சி விரைவில் கவிழ உள்ளதாகவும், நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டசபை தேர்தலும் நடக்கும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை எதிர்நோக்கியுள்ளனர் அரசியல் கட்சியினர். மூன்றாவது நீதிபதியின் முன்பு விசாரணைக்கு வந்துள்ள இந்த வழக்கில் எம்எல்ஏக்கள் தரப்பு வாதமும், முதல்வர், சபாநாயகர் மற்றும் கொறடா தரப்பு வாதங்களும் முடிவடைந்து தற்போது மீண்டும் எம்எல்ஏக்கள் தரப்பு பதில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தமிழக தலைவர் திருநாவுக்கரசர், 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்தாலும், செல்லாது என்று தீர்ப்பு வந்தாலும், இரு வகையிலும் அரசுக்கு பெரும்பான்மை இல்லாமல் போகக்கூடிய வாய்ப்புகள்தான் உள்ளது.

எனவே தற்போதிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தீர்ப்புக்கு பிறகு கவிழக் கூடிய வாய்ப்புள்ளது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதனுடன் சேர்த்தே சட்டமன்றத் தேர்தலும் நடைபெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.