மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழ் கடுமையாக விமர்சித்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசை விமர்சித்தும், எம்ஜிஆர் அதிமுகவை தொடங்க கருணாநிதி தான் காரணம் எனவே அதிமுகவினர் கூட கருணாநிதியை வணங்க வேண்டும் என கூறினார். இது அதிமுகவினரிடையை அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதிமுக அமைச்சர்கள் ரஜினிக்கு உடனடியாக பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் தற்போது அதிமுகவின் நமது அம்மா நாளிதழ் ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மறைந்த கருணாநிதியையும் மறைமுகமாக கடுமையாக விமர்சித்துள்ளது.

எல்லாரும் எல்லாமும் பெறவே, முச்சு இருக்கும் வரை முழங்கிய மூன்றெழுத்து மந்திரம் எம்ஜிஆர் என்றும், எல்லாமும் தன் குடும்பம் பெறவே என்பதிலே தந்திரமாய் செயல்பட்டவர் கருணாநிதி என்றும் மந்திரமும், தந்திரமும் ஒருநாளும் ஒன்றென ஆகாது என மறைமுகமாக அதில் விமர்சித்துள்ளனர்.