முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த ‘சர்கார்’ திரைப்படத்திற்கு எதிராக தற்போது கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இப்படத்தில் வரலட்சுமியின் பெயர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்பதாலும், தமிழக அரசின் இலவச திட்டங்களை எதிர்மறையாக விமர்சனம் செய்து பொதுமக்களை வன்முறைக்கு துாண்டியுள்ளதாகவும் ஆளும் கட்சியான அதிமுக அமைச்சர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை அண்ணாநகரில் இப்படம் ஓடிக்கொண்டிருக்கும் சினிப்பிரியா காம்ப்ளக்ஸ் முன்பு அதிமுக பிரமுகர் ராஜன் செல்லப்பா தலைமையில் இன்று மதியம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்பாரட்டத்தில் சர்கார் படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறனை கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.

அதிமுகவினர்களின் இந்த போராட்டம் காரணமாக சினிப்பிரியா காம்பளக்ஸில் உள்ள மூன்று திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் 2.30மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சர்கார் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.