அட்வான்ஸ் புக்கிங்கில் சக்கை போடு போடுகிறது விவேகம்!

அனைவரும் மிகவும் எதிர்பார்த்த நம்ம தல அஜித் நடிக்கும் விவேகம் திரைப்படம் வரும் ஆகஸ்டு 24 ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகிறது. டிக்கெட்டுகள் விற்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதாம். தொடக்கமே இப்படியென்றால் படம் கண்டிப்பாக பல கொடிகளை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் விவேகம். ஏற்கனவே இவரது இயக்கத்தில் வெளிவந்த வேதாளம், வீரம் ஆகிய படங்களும் சக்கை போடு போட்டது, தற்போது விவேகம் திரைப்படம் இயக்குனர் சிவாவிற்கு அஜித்திற்கும் ஹாட்ரிக் வெற்றியளிக்க காத்திருக்கிறது. படத்தின் டீஸர் மற்றும் பாடல் வெளியானபோதே ஒரு  திருவிழா போல களைக்கட்டியது, எங்கு பார்த்தாலும் சர்வைவா பாடல் ஒலித்த வண்ணமே இருந்தது தற்போது  படமே விரைவில் வெளிவருகிறது என்னும் நிலையில் திரும்பும் பக்கம் எங்கும் அஜித்தின் போஸ்டர்களைத்தான் பார்க்க முடிகிறது. வேறு எந்த ஒரு படத்திற்கும் இப்படியொரு எதிர்பார்ப்பை மக்கள் கண்டதில்லை. அஜித்தின் 57 வது படமான விவேகம் திரைப்படத்தில் இதுவரை காணாத தோற்றத்தில் நடித்திருக்கும் அஜித்தை பார்க்க ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.

காஜல் அகர்வால் முதன் முறையாக இப்படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்துள்ளார். விவேக் ஓபராய் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமும்  இதுதான். அக்ஷரா ஹசன் அவர்களும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவ்வளவு பாராட்டுகளையும் எதிர்பார்ப்புகளையும் அள்ளி குவித்திருக்கும் விவேகம் திரைப்படம் திரைக்கு வந்த பிறகு இமாலய வெற்றியை அடையும் என்று நம்பலாம்.