மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஒட்டுமொத்த மாநிலமும் சின்னாபின்னமானது. சாலைகள், வீடுகள், பாலங்கள், உள்கட்டமைப்புகள் என அனைத்தும் சீர்குலைந்தது. மழை வெள்ளத்தால் நிலைச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் இடிந்தது. இந்த மழை வெள்ளத்தால் 483 பேர் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்து உதவிகள் சென்றுகொண்டிருக்கின்றன. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் தற்போது தான் ஓரளவுக்கு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. ஆனால் மழை பாதிப்பால் பல்வேறு பகுதிகளில் தொற்றுநோய் ஏற்பட ஆரம்பித்துள்ளன.

கேரளாவில் வேகமாக பரவி வரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் நூற்றுக்கணக்கானோர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.