மீண்டும் அஜித்-சிவா கூட்டணி?

Siva, Ajith @ Vivegam Movie Wroking Stills HD

அஜித்-சிவா கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியிருக்கிற  ‘விவேகம்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. குறிப்பாக, அஜித் படம் முடிவடைந்து அது ரிலீசாவதற்கு முன்பே அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகிவிடும். ரசிகர்களும் அஜித்தின் அடுத்த படம் என்னவாக இருக்கும்? என்பது குறித்து தங்கள் கற்பனைகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி டிரெண்டிங்கில் கொண்டு வருவார்கள்.

இந்நிலையில், அஜித் அடுத்ததாக யாருடன் இணையப் போகிறார் என்பது குறித்த தகவல் லேசாக கசிந்துள்ளது. அஜித்தின் 25 வருட திரையுலக பயணத்தை கொண்டாடும் விதமாக கும்பகோணத்தில் அஜித் ரசிகர்கள் அவருக்கு சிலை ஒன்றை நிறுவி, அதற்கு திறப்பு விழா கொண்டாடினர். இதில், காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அவர் கூறும்போது, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித்-சிவா இணையும் 4-வது படத்தில் என்னை நடிக்க கேட்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இவர் சொன்னதை வைத்து பார்க்கும் அடுத்து 4-வது முறையாக அஜித்-சிவா கூட்டணி இணையப் போவதாக கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. தற்போது ‘விவேகம்’ படத்தை தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே அடுத்த படத்தை தயாரிக்கவிருப்பதும் உறுதியாகியுள்ளது.

அஜித்-சிவா கூட்டணியில் ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய வெற்றிப்படங்கள் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘விவேகம்’ படமும் அந்தளவுக்கு வெற்றியைப் பெறும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது எனலாம்.