சமூக வலைத்தளங்களில் தனது பெயரில் ரசிகர்கள் தெரிவித்த கருத்திற்கு நடிகர் அஜீத் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்களுக்கிடையே பல வருடங்களாக மோதல் நீடித்து வருகிறது. விஜய் படமோ, டிரைலரோ அல்லது புதிய படத்தின் புகைப்படமோ  வெளியானால், அஜீத் ரசிகர்கள் அதை கலாய்ப்பதும், அஜீத் படத்தை விஜய் ரசிகர்கள் கிண்டலடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

தற்போது கூட விஜயின் ‘மெர்சல்’ மற்றும் அஜீத்தின் ‘விவேகம்’ ஆகிய படங்கள் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த படங்கள் குறித்தும் இரு ரசிகர்களுக்கிடையேயும் கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், அஜீத்தின் சட்ட ஆலோசகர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், நடிகர் அஜீத்திற்கு டிவிட்டரிலோ, ஃபேஸ்புக்கிலோ கணக்கு கிடையாது. ஆனால், சில நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள் சமூகவலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை அஜீத்தின் கருத்தாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள். இது அஜீத்திற்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அஜீத் தன் மன வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்தில், சுறா படத்தை கிண்டலடித்த ஒரு பெண் பத்திரிக்கையாளரை விஜய் ரசிகர்கள் தரக்குறைவாக விமர்சித்தனர். இது சர்ச்சையானதை தொடர்ந்து, விஜய் ஒரு அறிக்கை வெளிட்டார். அதில் பெண்களை மதிக்கவேண்டும். அவர்களுக்கு எதிராக  தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என பொதுவாக குறிப்பிட்டிருந்தார். தனது ரசிகர்களை கண்டிக்கவில்லை.

ஆனால், அஜீத்தோ தனது ரசிகர்களின் செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, அவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.