அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோருக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டனர். விஜய்க்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் இருப்பதாக தெரிகிறது. ஆனால், அஜித் நடிக்கும் வேலையை மட்டும் பார்த்து வருகிறார். கடந்த 2011ம் ஆண்டு தனது ரசிகர் மன்றங்களை கலைத்து விடுவதாகவும் அஜித் அறிவித்துவிட்டார். ஆனாலும், அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் அதிகரித்து செல்கிறார்களே தவிர குறைந்தபாடில்லை.

இந்நிலையில், திருப்பூரில் அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணையும் விழா நேற்று நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை சவுந்தரராஜன் “நடிகர்களிடையே நேர்மையானவர் அஜித். திரைத்துறையில் தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய விரும்புவர் அவர். அவரைப் போலவே அஜித் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால்தான் பாஜகவில் இணைந்துள்ளனர்” எனப் பேசினார். அதேபோல் “அஜித் ரசிகர்கள் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்தார்.

தனது ரசிகர்கள் தனக்கு தெரியாமல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால்தான் அஜித் ரசிகர் மன்றங்களையே கலைத்தார். ஆனால், தற்போது அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், மன்றங்களையே கலைத்து விட்டதால் இதுபற்றி அஜித் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.