இதற்காகவாவது வாய் திறப்பாரா அஜித்?

03:29 மணி

விவேகம் படத்தின் கதை தன்னுடையது என்று பிரபல தயாரிப்பாளர் முகநூல் பக்கத்தில் கண்ணீர் வடித்துள்ளார்.

அஜித் நடிப்பில் சிவா இயக்கிய விவேகம் கடந்த வியாழன் அன்று வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூலில் ஓரளவிற்கு பரவாயில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். சுட்ட கதை, நளனும் நந்தினியும் ஆகிய படங்களின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். அவர் துரோகம் என்ற தலைப்பில் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
விவேகம் கதை என்னுடையது. நான் எடுக்கவிருந்த ‘ஐ.நா’ படத்தின் கதையைத்தான் இவர்கள் விவேகம் படமாக எடுத்திருக்கிறார்கள். 2013ம் ஆண்டிலேயே ஐ.நா. படத்தின் கதை எழுதப்பட்டது. இந்த கதைக்கு பெரிய நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய நான் அஜீத்தின் உதவியாளரிடம் இந்த கதையின் வடிவத்தை கொடுத்தேன். அதனை பெற்றுகொண்ட அவர் 3 வாரத்தில் அஜித்தை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என கூறினார். அதன்பின், என்னை தொடர்பு கொண்ட அவர், அறிமுக இயக்குனர் படங்களில் அஜித் நடிக்க மாட்டார். எனவே அவரிடம் கதை சொல்ல முடியாது எனக் கூறினார்.

இந்த நிலையில் சமீபத்தில் விவேகம் படத்தை பார்த்த போது அதிர்ச்சி அடைந்தேன். காரணம் படத்தின் 60 சதவீத காட்சிகள் நான் ஏற்கனவே கூறிய கதையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் அஜித்திற்கோ, இயக்குனர் சிவாவிற்கோ தொடர்பு இருக்கும் எனத் தோன்றவில்லை. இந்த கதையை விவேகம் படமாக மாற்றி, என்னை அழ வைத்தது அஜித்தின் அந்த உதவியாளராகத்தான் இருக்க வேண்டும். இந்த படத்தின் தொடக்கத்தில் இந்த படத்தில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே என போடுகிறார்கள். ஆனால், என்னுடைய கதையைத்தான் படமாக எடுத்துள்ளனர். அந்த கதையை அஜித்தையும், அவரின் ரசிகர்களையும் மட்டுமே மனதில் வைத்து எழுதினேன்.  ஆனால் தற்போது வேறு நடிகர்களை வைத்து ஐ.நா என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறேன். அந்த படம் வெளிவர இன்னும் ஒன்றரை வருடங்கள் ஆகும்.

இந்த கதையை யாரிடமெல்லாம் கூறினேனோ அவர்கள் அனைவரும் என்னை அழைத்து என் கதை திருடப்பட்டது பற்றி அதிர்ச்சியுடன் பேசினார்கள். விளம்பரத்திற்காக இந்த தகவலை நான் கூறவில்லை. என்னைப் போல் எந்த இயக்குனரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இதை பேசுகிறேன்.
 
மூன்று படங்கள் எடுத்த எனக்கே இந்த பிரச்சனை எனில், புதிதாக வரும் இயக்குனர்களை நினைத்தால் பயமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் அஜித் தலையிட வேண்டும். அஜித்தின் உதவியாளர் என்னை தொடர்பு கொண்டு பேச வேண்டும். இல்லையேல் விவேகம் படம் என்னுடைய கதை என்பதை மக்கள் முன் ஆதராத்துடன் வெளியிடுவேன். என் பக்கம் நியாயம் இருப்பதாக தோன்றினால் எனக்கு ஆதரவு கொடுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு என்ன பதில் அளிப்பார் அஜித்? அல்லது வழக்கம் போல மௌனம் காப்பாரா என்பதுதான் ரசிகர்களின் கேள்வி

(Visited 163 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com