50 வருடமாக திமுக தலைவராக இருந்த கருணாநிதி இறந்த பின்னர் அவரது மகனும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை அடுத்த தலைவராக்குவதற்கான அனைத்து பணிகளும் ரகசியமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது அழகிரி தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியில் முக்கியமான தலைவர்கள் அனைவரும் ஸ்டாலின் ஆதரவாளராக இருப்பதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆன மு.க.அழகிரி தனது செல்வாக்கை நிரூபிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பிரம்மாண்ட பேரணி ஒன்றை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதியை நோக்கி நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த பேரணியில் ஒரு லட்சம் பேராவது கலந்துகொள்ள வேண்டும் என அழகிரி அறிவுறுத்தியுள்ளாராம்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களையும் திரட்ட திட்டமிட்டுள்ள அழகிரி எல்லா மாவட்டத்தில் உள்ளவர்களிடமும் பேசி வருகிறாராம். அழகிரியோடு இன்னும் தொடர்பில் உள்ள மாவட்ட திமுக பிரமுகர்கள், மாவட்ட செயலாளர்களின் எதிர் கோஷ்டிகள் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்த வேலைகளை முடிக்கி விட்டுள்ளார் அழகிரி.

இந்த பேரணிக்காக காவல்துறை அனுமதியை பெற இருக்கிறார்கள். செப்டம்பர் 5 அல்லது அதனையொட்டிய நாட்களில் அழகிரி தலைமையிலான இந்த பேரணி நடக்க உள்ளதாக பேசப்படுகிறது. இது திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. விரைவில் திமுகவில் பூகம்பம் வெடிக்கும் என விபரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர்.