முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தான் மீண்டும் தாய் கழகமான திமுகவில் இணைவதில் எந்த தவறும் இல்லை என கூறியுள்ளார்.

கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தார். மேலும் திமுகவில் தென் மண்டல அமைப்பு செயலாளராக பதவி வகித்தார். கட்சியில் சர்வ பலத்துடன் கோலோச்சி வந்த மு.க.அழகிரி திடீரென கட்சியில் இருந்து தூக்கப்பட்டார். அடுத்த தலைவர் யார் என்ற விவகாரத்தில் ஸ்டாலினுக்கு எதிராக பல கருத்துக்களை அழகிரி முன்னர் கூறிவந்தார்.

இதனையடுத்து கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக அழகிரியை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கியிருந்தார் கருணாநிதி. ஆனாலும் அழகிரி தொடர்ந்து கட்சிக்கு எதிராக பேசிக்கொண்டு இருந்தார். இதனையடுத்து நிரந்தரமாக கட்சியில் இருந்து அழகிரியை நீக்குவதாக கருணாநிதி அறிவித்தார். அவர் இறக்கும் வரை அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கவே இல்லை.

இந்நிலையில் மீண்டும் திமுகவில் அழகிரி இணைவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. முன்னதாக ஸ்டாலினுக்கு எதிராக பேசி வந்த அழகிரி, நான் திமுகவில் இணைவதில் ஒன்றும் தவறில்லை. தாய் கழகமான திமுகவில் நான் சேருவதில் எந்த தவறும் இல்லை என்றார். மேலும் நான் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு பின்னர் திமுக தேர்தலில் ஒருமுறைகூட வெற்றிபெறவில்லை என்றார்.