இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் வேற்று கிரகவாசி உலவுவதாக எழுந்துள்ள செய்தி அப்பகுதி மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் அம்பாறை மாவட்டதிலுள்ள ஒரு கிராமத்தில் இரவு நேரத்தில் 2 அடி உயரம் கொண்ட ஒரு மர்ம நபர் நடமாடி வருவதாக அப்பகுதி விவசாயிகள் கூறி வருகின்றனர். கடந்த 2ம் தேதி இரவு தனது வயலில் விதைத்துள்ள சோள பயிரை பார்வையிடுவதற்காக கருணாதிலக்க என்பவர் சென்றுள்ளார்.

அப்போது அங்கு அவர் கண்ட உருவம் அவரை தூக்கி வாரிப்போட்டது. பயத்தில் அங்கிருந்து ஓடிய அவர், சிலரை அழைத்து வந்துள்ளார். ஆனால், அந்த குள்ள உருவம் அங்கு இல்லை.

இதுபற்றி கூறியுள்ள அவர் “2ம் தேதி இரவு பயிர்களை பார்வையிட வயலுக்கு சென்றேன். அப்போது ஒரு வினோத சத்தம் கேட்டது. டார்ச் லைட் அடித்து பார்த்த போது 2 அடி உயரத்தில் ஒரு உருவம் நின்றிருந்தது. தலைமுடி நீளமாகவும், முகம் சிவப்பாகவும் இருந்தது. முகம் உள்வாங்கி உதடுகள் சிவப்பு நிறத்தில் இருந்தது. டார்ச் லைட்டை அதன் முகத்தில் அடித்து சத்தமிட்டேன். ஆனால், அது அசையவே இல்லை. எனவே, பயந்து ஓடி சென்று அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்தேன். ஆனால், அந்த உருவம் மாயமாகி விட்டது. ஆனால், அது சென்ற காலடி தடங்கள் இருந்தது” எனக்கூறியுள்ளார்.

அந்த குள்ள மனிதர் ஏலியானாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் இலங்கையில் செய்தியாகவும் வெளிவந்துள்ளது.