திமுக குறித்து அதிரடியாக கருத்து தெரிவிக்கும் முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள், உடன்பிறப்புகள் அனைவரும் என் பக்கம் தான் உள்ளார்கள் என்று பேசியுள்ளார். இது திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி மறைந்ததையடுத்து திமுக செயற்குழு கூட்டம் நாளை அவசரமாக நடைபெற உள்ளது. தலைவர் பதவி தாற்போது காலியாக உள்ளதால் அதனை உடனடியாக நிரப்ப செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. திமுகவின் அடுத்த தலைவராக தற்போது செயல் தலைவராக இருக்கும் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் தான் வர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, என்னுடைய ஆதங்கத்தை எனது தந்தையும் தலைவருமான கருணாநிதியிடம் வேண்டிக்கொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது.

தமிழகத்தில் உள்ள கருணாநிதியின் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் எல்லோரும் என் பக்கம் தான் உள்ளார்கள், என்னை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காலம் பின்னாளில் பதில் சொல்லும். என்னுடைய ஆதங்கம் கட்சி தொடர்புடையது தான். நான் இப்போது திமுகவில் இல்லை. எனவே, திமுகவின் செயற்குழு கூட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார் அதிரடியாக. அழகிரியின் இந்த பேச்சு திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.