நடிகை ஓவியா பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார். அவர் சினிமாவில் நடித்த போது கிடைக்காத புகழ் தற்போது அவருக்கு கிடைத்து வருகிறது.

பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்ட ஓவியாவுக்கு அவரது ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்து அதகளப்படுத்தினார்கள். ஓவியா எங்கு சென்றாலும் அவரை ரசிகர்கள் சூழ்ந்துவிடுகிறார்கள். பிக் பாஸுக்கு பின்னர் அவருக்கு பல பட வாய்ப்புகள் மற்றும் பல நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் இலங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற ஓவியாவுக்கு அங்குள்ள ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து அங்குள்ள ஊடகத்தினரை சந்தித்த ஓவியா, பொதுவாக நடிப்பதற்கு விருது கொடுப்பார்கள். ஆனால் நான் ஒன்றுமே பண்ணாமல் இவ்வளவு அன்பு கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு இதற்குத் தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை, இருந்தாலும் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.

முன்பைவிட இப்போது எங்குச் சென்றாலும் மக்கள் என்னை அடையாளம் கண்டு விடுகிறார்கள். இதற்கு முன் அவ்வாறாக இல்லை. உங்களின் அன்பிற்கும், ஆதரவுக்கும் எப்போதும் நான் நன்றிக்கடன் பட்டவளாக இருக்கிறேன். இனிமேலும் இருப்பேன். இன்று நான் உலகம் முழுவதும் பேசப்படுபவளாக இருப்பதற்குக் காரணம் உங்களின் ஆதரவும், அன்பு மட்டுமே என்றார்.