பிரபல நடிகை அமலாபால் மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு காயம் ஏற்பட்ட தனது கையுடன் உதவி செய்யும் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

நடிகை அமலாபால் அதோ அந்த பறவைப்போல என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது அவரது வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கேரளாவில் கனமழை பெய்து மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் வெளியேற முடியாமல் சிக்கித்தவிக்கின்றனர். இதனால் அத்யாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

ராணுவம் 24 மணி நேரமும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து மக்கள் கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகை அமலாபால் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி அனுப்பியுள்ளார். தானே நேரடியாக கடைக்கு சென்று அத்யாவசிய பொருட்களை வாங்கிய அமலாபாலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

வலது கையில் காயம் ஏற்பட்டு கட்டுபோட்ட நிலையில் அமலாபால் செய்யும் இந்த உதவி நிச்சயம் பாராட்டத்தக்கது. இந்த புகைப்படத்தை மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி உள்ளிட்ட பலர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் இணைத்துள்ளனர். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.