அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளி அன்று வெளிவந்த ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றிருந்த சில வசனங்களை நீக்க கோரி ப.ஜ.க தரப்பினரிடம் தொடர்ந்து வலுத்து வந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, “தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை அகற்றுவதற்குத் தயாராக இருக்கிறோம்” என்று ஸ்ரீ தேனாண்டாள் பில்ம்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த முடிவு அவர்களாக எடுத்த முடிவா அல்லது அழுத்தத்தின் பேரில் அல்லது அச்சுறுத்தலின் பேரில் எடுத்த முடிவா என்று வாக்காடல்கள் நடந்த வண்ணம் உள்ளன. மெர்சல் விவகாரம் குறித்து திரைப்பட இயக்குனர் திரு அமீர் பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றின் சாரம்சம் இதோ:

“தேனாண்டாள் நிறுவனம் இதை விருப்பதுடனா செய்கின்றனர்? அழுத்தம் காரணமாகத்தான் செய்துள்ளனர். இன்றைக்கு ஆளும் மத்திய அரசாக இருக்கட்டும் மாநில அராக இருக்கட்டும், மாநில அரசுக்கு மத்திய அரசு கொடுக்கும் அழுத்தம், இங்கே இருக்கும் பாரதிய ஜனதா தலைவர் கொடுக்ககூடிய அழுத்தத்தின் காரணமாகத்தான் காட்சியை நீக்குகிறோம் என்று சொல்கிறார்களே தவிர இது அவர்களாக எடுத்த முடிவாக இருக்காது.

அதாவது இப்படி ஒவ்வொரு திரைப்படங்கள் வெளிவந்த பிறகு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொருவரும் சென்சாருக்குப் பின்னர் ‘ஒரு சர்ச்சைக்குரிய கருத்து இருக்குனு சொல்லி’ இதையே செஞ்சிட்டுருந்தாங்கனு சொன்னா, கருத்து சுதந்திரம் என்பதே இல்லாமல் போய்விடும். அவ்ளோதான். தமிழகத்தில் இனிமே திரைப்படங்களில் எது பேச வேண்டும் எது பேசக் கூடாது என்று ஒரு வரைமுறை மாதிரி புத்தகம் மாதிரி கைல கொடுத்து, ஆளும் கட்சிக்கோ, மத்திய அரசுக்கோ, மத்திய ஆட்சியாளர்களுக்கோ ஆதரவான வசனங்கள் மட்டும் தான் பேசப்படும் வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டிருக்கோம். இது மிகவும் தவறான முன் உதாரணமா இருக்கு.

பொதுவாக சென்சார் செய்யப்பட்ட படங்களுக்கு முன்னர் இது போன்ற இது போல எதிர்ப்புகள் வந்திருக்கு. இலங்கை தமிழர் குறித்து வந்த திரைப்படமா இருக்கட்டும் அல்லது விஸ்வரூபம் குறித்து வந்த பிரச்சனைகளாக இருக்கட்டும் அதை நாம் மறுக்க முடியாது. ஆனால், அன்றைக்கெல்லாம் நடந்த பிரச்சனையை நாம் பார்க்கும் போது அது ஒரு சமூகத்தில் ஒரு இன மக்களிடம் கலவரத்தை தூண்டிவிடும் என்ற காரணத்திற்காக அதெல்லாம் முன்வைக்கப்பட்டது. ஒரு மத நம்பிக்கையில் கைவைப்பதன் காரணமாக அதெல்லாம் முன்வைக்கப்பட்டது.

இது அப்படி அல்ல. ஆட்சியாளர்களை விமர்சனமே செய்யக்கூடாது, ஒரு திட்டத்தை விமர்சனமே செய்யக்கூடாது என்பது போல இருக்கிறது, இது சரியானதாக இல்லை. அதிலும் நம்ம மதிப்பிற்குரிய ஹரிஹர ராஜா ஷர்மா போன்றவர்கள் என்ன குறிப்பிடுகிறார்கள் என்றால் ‘ஜோசப் விஜய்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துறார்கள். இங்கு ‘ஜோசப் விஜய்’ என்ற வார்த்தையை ஏன் நீங்க பயன்படுத்துகிறீர்கள்? இது தவறானதாக இருக்கே. “‘ஜோசப் விஜய்’ இன் வெறுப்பு அரசியலே மெர்சல்” என்று சொல்லி இருக்காரு. அப்போ, ஹரிஹர ராஜா ஷர்மாவின் வெறுப்பு அரசியல் என்ன என்பது ஜோசப் விஜய் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போது, உங்களுடைய வெறுப்பு அங்க வெளிப்படுதே. இது என்ன வகை நியாயம்னு எனக்கு தெரியல, எதுக்கு இங்க இருக்கறவங்க ஒத்துக்குறாங்கனு தெரியல. இந்தக் காட்சிகளை நீக்கப்போறோம் என்பது நடிகை விஜய் மற்றும் இயக்குனர் அட்லீயின் ஒப்புதலோடு நடைபெறுகிறதா? அதை நீக்குறேனு அவங்க முதல்ல ஒத்க்கிட்டாங்களா? ஒரு வசன கர்த்தா அதுக்கு ஒத்துக்கிட்டாரா? மேலும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள் புதுசு ஒன்றும் கிடையாதே !! தெரு முழுக்க நாம் தமிழர் தலைவர் மேடைகளில் பேசியவைதானே அவை.

ஒரு கருத்திற்கு எதிர் கருத்து வரத்தான் செய்யும் ஆனால் அதற்காக தான் சொன்னதிலிருந்து பின்வாங்குவது எப்படி சரியானதாகும்? ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டு திரைக்கு வந்த பிறகு, அதிலிருக்கும் வசனங்களை நீக்க ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் சொல்வது என்பது சரியானது இல்லை என்பது தான் இப்போது இருக்கும் பிரச்சனை.

மேலும் அமீர், “மெர்சல் படத்தின் பிரச்சனையை மற்ற திரைப்படங்களின் பிரச்சனை போல பார்க்க முடியாது. இது முழுக்க முழுக்க பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் பின்னடவைதான் ஏற்படுத்தும். இதனால் கட்சி வளருமா? இந்த செயல் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துமே தவிர அவர்களுக்கு பயனளிக்காது.” என்று கூறியுள்ளார்.