நடிகர் ஆனந்த் ராஜ் தீவிரமான ஜெயலலிதா விசுவாசி ஆனால் தற்போது கலைஞர் கருணாநிதியின் தீவிர ரசிகராக மாறிவிட்டார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரை அடிக்கடி சென்று விசாரித்தார் ஆனந்த் ராஜ்.

கருணாநிதி மறைவின்போது ஆனந்த் ராஜின் செய்கைகள் சில வியக்க வைத்தன. இவரது பேச்சு கவனிக்க வைத்தன. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசியான அதிமுக ஆனந்த் ராஜ் தானா இது என சிந்திக்க வைக்கிறது தற்போது அவருடைய பேச்சுக்கள்.

இந்நிலையில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆனந்த் ராஜிடம், கருணாநிதி குறித்து இப்பொழுது இவ்வளவு பேசும் நீங்கள் மறைந்த ஜெயலலிதா குறித்து ஏதாவது சொல்ல நினைக்கிறீங்களா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஆனந்த் ராஜ், ஒரு வருத்தம் எனக்கு தனிப்பட்ட முறையில் இருக்கிறது. அது என்னவென்றால், கருணாநிதிக்கு இருந்ததை போன்ற ஒரு குடும்பம் மறைந்த ஜெயலலிதாவுக்கு இருந்திருக்க கூடாதா? என்று ஏக்கப்பட்டிருக்கிறேன்.

அப்படி ஒரு குடும்பம் ஜெயலலிதாவுக்கு இருந்திருந்தால், இன்னும் சில காலம் அவர் நம்முடன் இருந்திருக்க மாட்டாரோ என்று நினைத்து வேதனைப்பட்டிருக்கிறேன். இது என் தனிப்பட்ட ஆசை. குடும்பம் என்று இருந்தால், கண்டிப்பாக அவரை பொத்தி பாதுகாப்பாக வைத்து நம்முடன் இன்னும் சில காலம் வாழ வைத்திருப்பார்களோ என்ற ஏக்கம் எனக்கு என்றுமே இருந்திருக்கிறது என்றார் அவர்.