அனிதாவின் மரணம் வேதனையைத் தருகிறது: ரஜினி

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் அனிதா. மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்தவருக்கு நீட் என்னும் வடிவில் வந்த எமன் அவரது உயிரை பறித்துவிட்டான். பிளஸ்-2 வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வால் தனக்கு மருத்துவ படிப்பு கனவு வீணாகிவிட்டதே என்ற விரக்தியில் இருந்தவர், அதற்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து போராடினார். ஆனால், நீதிமன்றம் அவருக்கு கருணை வழங்க மறுத்துவிட்டது.

முடிவு, இன்று அனிதா மனஉளைச்சலால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அனிதாவின் இந்த தற்கொலை தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் அவரது மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். நடிகர் கமல் அனிதாவின் தற்கொலைக்கு எதிராக அனைவரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் அனிதாவின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, மாணவி அனிதா தற்கொலை குறித்து ரஜினி கூறுகையில், ‘மாணவி அனிதா மரணம் மிகுந்த வேதனையை தருகிறது. அனிதாவிற்கு நடந்தவை துரதிர்ஷ்டவசமானவை. தற்கொலைக்கு முன் அனிதா என்னவெல்லாம் நினைத்திருப்பாரோ என நினைத்து வேதனைப்படுகிறேன். அனிதாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்  என்று கூறியுள்ளார்.