உத்தரப் பிரதேச மாநிலத்தில் காதலித்து வந்த இருவரை ஆண்டி ரோமியோப்படை பிரித்துள்ளது. அந்த பெண்ணின் காலில் விழுந்து ஆண் மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இருவரையும் தோப்புக்கரணம் போடவைத்துள்ளனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்களைத் தொந்தரவு செய்பவர்களைப் பிடிக்க ஆண்டி ரோமியோ படை ஒன்றை உருவாக்கினார். கல்லூரிகள், பள்ளிகள், பூங்காக்கள் என இளைஞர்கள் அதிகமுள்ள பகுதிகளில் இந்த படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கான்பூர் பகுதியிலுள்ள காடிட் பூங்காவில் இரண்டு காதலர்களை ஆன்டி ரோமியோ படை கையாண்ட விதம் குறித்து அந்த படையை சேர்ந்த ஆயுஷ் கரே என்பவர் தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

அதில், ஒரு இந்துப் பெண் மற்றும் முஸ்லிம் வாலிபர் ஒருவர் பூங்காவில் ஜோடியாக இருந்தனர். அவர்களை பிடித்து அறிவுறுத்திய நாங்கள், அவர்களை பார்த்ததும் கத்தினோம். அவர்களுக்குக் கட்டளையிட்டோம். இதனையடுத்து, அந்த பையன் பெண்ணின் கையில் ராக்கி கட்டினார்.

இந்த லவ் ஜிகாத்தில் ஈடுபட வேண்டாம் என இந்து சகோதரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என கூறியுள்ளார் ஆண்டி ரோமியோ படையை சேர்ந்த அந்த நபர். மேலும் அந்தப் பெண்ணின் காலில் விழுந்து அவருடன் அந்த ஆண் மன்னிப்பு கேட்டுள்ளார். அது மட்டுமல்லாமல், நடந்தது தவறு என்று கூறி இருவரும் தோப்புக்கரணம் போட்டுள்ளனர் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.