ஊழலுக்கு எதிரானவர்கள் யாருமே எனக்கு உறவினர்கள்தான்: கெஜ்ரிவாலுடனான சந்திப்புக்கு பிறகு கமல் பேட்டி

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். தொடர்ந்து அரசியலில் இறங்கப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாகவும் கூறியுள்ள அவர், பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து ஆலோசனை கேட்டு வருகிறார். சமீபத்தில் திருவனந்தபுரம் சென்றிருந்த கமல், கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தற்போது டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவால் இன்று கமலை சந்தித்து பேசியுள்ளார். இவர்களுடைய சந்திப்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் இல்லத்தில் நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, கெஜ்ரிவாலுக்கு கமல் வீட்டில் மதிய உணவு பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது.

சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக சேர்ந்து பேட்டி அளித்தனர். அப்போது கமல் பேசும்போது, எங்கள் இருவரின் சந்திப்பு எதற்காக இருக்கும் என, உங்கள் அனைவராலும் யூகிக்க முடியும். கெஜ்ரிவால் என்னை சந்தித்தே பாக்கியமாக கருதுகிறேன். எனது தந்தை காலம் முதல் அரசியல் தொடர்புடையவன் நான். ஊழலுக்கு எதிர்ப்பான யாருமே எனக்கு உறவினர்கள்தான் என்று கூறினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, கமல் ஒரு சிறந்த நடிகர். அவரை நேரில் சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று என்று தெரிவித்தார். மொத்தத்தில் இருவரும் அரசியல் பற்றி தீவிர ஆலோசனை செய்துள்ளார்கள் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. ஆனால், அவர்கள் என்ன முடிவு எடுத்தார்கள்? என்பதுதான் மர்மமாகவே உள்ளது.