மூன்றாவது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் முக்கியமான ஆட்டமாக நைஜீரியா அணியுடன் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய அர்ஜெண்டினா அணி மெஸ்ஸி மற்றும் ரோஜோவின் அருமையான கோல்களால் வெற்றிபெற்றது.

21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் டி பிரிவில் நேற்று இரவு 11.30 மணியளவில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜெண்டினா-நைஜீரியா அணிகள் மோதின. ஏற்கனவே குரோஷியா அணி இரண்டு வெற்றிகள் பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் இந்த போட்டியில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாய சூழலில் நைஜீரியாவை எதிர்கொண்டது அர்ஜெண்டினா.

இந்த போட்டியில் மெஸ்ஸி மேஜிக் கோல் அடித்து அர்ஜெண்டினாவை அடுத்த சுற்றுக்கு கொண்டு செல்ல வேண்டும் என அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே சிறப்பாக விளையாடிய மெஸ்ஸி நைஜீரியாவுக்கு எதிராக 14-வது நிமிடத்தில் அசத்தலான கோல் அடித்து அர்ஜெண்டினாவை முன்னிலை பெற வைத்தார்.

ஆனால் இரண்டாவது பாதியின் 51-வது நிமிடத்தில் நைஜீரியாவுக்கு பெனால்டி ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க அதனை பயன்படுத்தி விக்டர் மோசஸ் கோல் அடித்தார். இந்நிலையில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த அர்ஜெண்டினாவுக்கு 86-வது நிமிடத்தில் மார்கஸ் ரோஜோ மின்னல் வேகத்தில் ஒரு கோல் அடித்து வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

மற்றொரு ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணி குரோஷியாவிடம் தோல்வியை தழுவியதால், அர்ஜெண்டினா இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வரும் சனிக்கிழமை அர்ஜெண்டினா – பிரான்ஸ் அணிகள் மோத உள்ளது.