ஆளுநர் குறித்து சட்டமன்றத்தில் அமைச்சர் ஓஎஸ் மணியனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, சபாநாயகர் தனபாலுக்கும் அமைச்சருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வெளிநடப்பு செய்தார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் இரண்டாவது அறிக்கை குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் முதல்வர் விளக்கம் அளிக்காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து மாநில சுயாட்சி குறித்து மு.க.ஸ்டாலின் பேசியதற்கு பதிலளிக்க முயன்றார் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.

ஆனால் இதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர் தனபால், ஆளுநர் குறித்து அவையில் விவாதிக்க வேண்டாம் என்று ஏற்கனவே கூறிவிட்டேன். மேற்கொண்டு நீங்கள் ஆளுநர் பற்றி பேசி புதுப் பிரச்சினையைக் கிளப்ப வேண்டாம் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர், நான் புதிய பிரச்சனைக்குப் போகவில்லை, எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன கருத்துக்கு பதில் சொல்கிறேன், தவறாக பேசினால் நீங்கள் அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கலாம் என்றார்.

இதனால் அமைச்சருக்கும், சபாநாயகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நீங்கள் பேசுவது எனக்குச் சரியெனப்படாவிட்டால் உங்கள் பேச்சை நான் அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டியது வரும் என்று சொல்லி ஓ.எஸ்.மணியனுக்கு அனுமதி வழங்கினார் சபாநாயகர்.

அமைச்சர் பேச முயன்றபோது குறுக்கிட்ட துணை முதல்வர் ஓபிஎஸ், ஆளுநர் பற்றி அவையில் பேச வேண்டாம் என சபாநாயகர் கூறினார். அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுநர் குறித்துப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார். இதனால் பேசாமலேயே அமர்ந்துவிட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சிறிது நேரம் அமைதியாக இருக்கையில் இருந்துவிட்டு பின்னர் அவையிலிருந்து வெளியே சென்றார்.