Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் அசுரவதம் திரை விமர்சனம்

அசுரவதம் திரை விமர்சனம்

குழந்தைகளுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள்,கொலை போன்றவைதான் படத்தின் சுருக்கமே அதை கொஞ்சம் சஸ்பென்ஸ் கலந்து தர முயற்சி செய்திருக்கிறார் மருதுபாண்டியன்.இவர் ஏற்கனவே சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்தின் இயக்குனர் ஆவார்.

வழக்கமான வாடிப்பட்டி வத்தலக்குண்டு,உசிலம்பட்டி டைப் சசிக்குமார் படமா என்றால் இல்லை ,படம் எடுக்கப்பட்ட ஏரியாக்கள் மட்டுமே அந்த ஊர்கள். சசிக்குமார் நாலு பேர சம்ஹாரம் பண்ற கதையில நடித்தாலும் சரி சஸ்பென்ஸ் த்ரில்லரில் நடிச்சாலும் சரி நான் மதுரை பக்கம் மட்டுமே நடிப்பேன் என வத்தலக்குண்டு,வாடிப்பட்டி பக்கம் மட்டுமே படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஆனால் கதைதான் கொஞ்சம் வாடியிருக்கிறது.

சசிக்குமார் படங்களில் வரும் வஸ்தாது வில்லன்கள் படத்தில் யாரும் இல்லை. சாதாரண மளிகை கடை வைத்திருக்கும் வசுமித்ரா அவர் மனைவி அவரை விட்டு பிரிந்து அவர் அப்பா வீட்டுக்கு சென்று இருந்து கொண்டு வர மாட்டேன் என்கிறார் மளிகை கடை வைத்திருக்கும் நபரின் மாமனார் ஒரு வாரத்தில் என் மகளை அனுப்பி வைக்கிறேன் மரியாதையா என் மகளை வைச்சு குடும்பம் நடத்து என சொல்லிவிட்டு போனை வைக்கிறார்

வைத்த அடுத்த நிமிடமே ஒரு போன் வருகிறது மளிகைக்காரருக்கு எடுப்பதற்குள் கட் செய்து விடுகிறார்கள். இப்படியே ஐந்து நிமிடத்திற்குமேல் அவரின் பொறுமையை சோதித்து ஒரு வழியாக சசிக்குமார் பேசுகிறார் ஒரு வாரத்துல உன்னை கொல்ல போறேன் என மிரட்டிவிட்டு யார் என சொல்லாமல் வைத்து விடுகிறார்.

பதை பதைத்துப்போன மளிகை கடைக்காரருக்கு பார்ப்பவன் எல்லாம் கொலைகாரன் போலவும்,ஹோட்டலில் சாப்பிடும்போது, ஹோட்டல்காரர் தோசைக்கரண்டியால் தோசைய எடுக்கும்போது அரிவாள் என பார்த்து பீதியாகும்போது கொஞ்சம் கொஞ்சமாக நாம் சீட்டின் நுனிக்கு வருகிறோம்.

ஊருக்கு ஒதுக்குப்புறமான மளிகைக்கடைக்காரரின் வீடு வீட்டுக்குள் சென்றால் படுக்கையில் பாம்பு இருக்கிறது.ஊருக்குள் சென்று ஆட்களை கூட்டி வருவதற்க்குள்பாம்பு சென்று விடுகிறது. யார்றா நம்மள கொல்ல முயற்சி செய்றதுன்னு மளிகைக்கடைக்காரர் மண்டையை பிய்த்துக்கொள்ள நாமும் பிய்த்துக்கொள்கிறோம்.

சத்யராஜ் நடித்த பழைய திரைப்படமான பூவிழி வாசலிலே திரைப்படத்தை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள் அதில் ஆஜானுபாகுவாக ஆறடி உயரத்தில் மலையாள வில்லன் பாபு ஆண்டனி மிரட்டியிருப்பார் ஒரு குழந்தையை கடத்த பெட்டிக்கடை அருகில் தம் அடித்து கொண்டு நிற்பார், ஹோட்டல் அருகில் நிற்பார், நோட்டம் பார்த்து கொண்டு இருப்பார். அதை போன்ற காட்சிகள் போலவே சசிக்குமாரும் மளிகைகடைகாரர் கடை முன்பே நின்று தம் அடிக்கிறார்

அமானுஷ்ய பார்வை பார்க்கிறார் வீட்டுக்கு முன்பு இரவு அமானுஷ்யமாக நின்று பார்க்கிறார். பார்க்கும் நமக்கும் ஏதோ படத்துல வெயிட்டா இருக்கு என சஸ்பென்ஸ் தொற்றிக்கொண்டிருக்கும்போதே உள்ளே வேறு ஒன்றும் உறுத்துகிறது. ஓவர் சஸ்பென்ஸ் வைக்கிறாங்களே சொதப்பிரக்கூடாது ஆண்டவா என வேண்டி முடிப்பதற்குள் நம்மையறியாமல் சீட்டின் நுனிக்கு வந்த நாம் சற்று பின்னாலே சென்றிருக்கிறோம்.

ஆம் அளவோடு காண்பித்தால் சஸ்பென்ஸ் அளவுக்கு மீறினால் , ஊரில் இருந்து வரும் மளிகைக்காரரின் மனைவியை சசிக்குமார் கடத்துகிறார் அவரை விரட்டி சென்ற மளிகைக்காரரை பாறையில் இருந்து பிடித்து தள்ளி கொடூரமாக கொலை செய்ய முயற்சி செய்கிறார், ஆனால் கொலை செய்யாமல் விட்டு விடுகிறார், முட்டுச்சந்துக்குள் அரிவாளை வைத்து கொலை செய்ய முயற்சி செய்கிறார், வீட்டுக்கு எதிரே நின்று கொலை செய்ய முயற்சி செய்கிறார், முயற்சி மட்டுமே செய்கிறார்.

மளிகைக்கடைக்காரருக்கு யாரிவன் நம்மளை ஏன் நோட்டம் போடுறான் கொலை செய்ய முயற்சி செய்றான்னு பைத்தியமே புடிச்சிருது.
இடையில் காமெடிக்காக சசிக்குமார் படத்து ஆஸ்தான காமெடியனனான நமோ நாராயணாவும் மளிகைக்கடைக்காரருக்கு பாதுகாப்பா இருக்கேன்னு விடிய விடிய காவலுக்கு உட்கார்கிறார்கள் மது குடித்துவிட்டு மயங்கி விடுகிறார்கள்.

கடைசியில் மளிகைக்காரரின் நண்பருக்கு தெரிந்த ஒரு காவல் அதிகாரி மூலம் சசிக்குமார் பிடிக்கப்பட்டு பலவித சித்ரவதைகளுக்கு பின்னரும் தான் யார் என்பதை சொல்லமாட்டேன் என்கிறார்.

நமக்காவது அவர் யார் என்று கடைசியிலாவது தெரிய வேண்டுமல்லவா, அதனால் நமக்காக மனதுக்குள் ப்ளாஷ்பேக் காட்சிகளை நினைத்து பார்க்கிறார் ஒரு ஐந்து நிமிடம் மட்டுமே வரும் சசிக்குமார், அவரது மனைவியாக அட்டக்கத்தி நந்திதா மற்றும் சசிக்குமாரின் சிறுவயது மகள் பாசமான குடும்பம் இந்த குடும்பத்த மளிகைக்கடைக்காரர் என்ன செஞ்சார் என சொல்லும் ப்ளாஷ்பேக்.

இறுதிக்காட்சியில் பலவித கஷ்டங்களை கொடுத்து தான் யார் என்பதையும் எதற்காக உன்னை கொல்கிறேன் என்பதையும் மளிகைக்கடைக்கார வில்லனிடம் அவரை கொல்லும் வரை சொல்ல மாட்டேன் என்கிறார் சசி.அப்படி தெரிந்து கொள்ளமலேயே எதற்காக கொல்லப்படுகிறோம் என பைத்தியம் பிடித்த நிலையியே வில்லன் இறக்க வேண்டுமாம்.

படத்தில் சசிக்குமார் பேசும் வசனங்களை ஒரு முழு வெள்ளைத்தாளில் எழுதினால் அரைப்பக்கம் கூட தாண்டாது வசனமே குறைவுதான் முதலில் இருந்து மிரட்டு மிரட்டுன்னு மிரட்டுவது இசையமைப்பாளர் கோவிந்த் என்பவர் இவர் மட்டுமே இப்படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறார், பின்னணி இசையில் ப்ப்பா பின்னிட்டார் .

சசிக்குமார் அண்ட் கம்பெனியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் நல்ல ஒளிப்பதிவு.இருட்டான காட்சிகள் தான் படத்தில் அதிகம்.

சஸ்பென்ஸ் காட்சிகள் படத்தில் அதிகம் இருப்பது ஓவர் டோஸ். அதை குறைத்து நல்ல இரண்டு பாடல், கொஞ்சம் காமெடி என இடையில் புகுத்தி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் பல லாஜிக் ஓட்டை படத்தில் இருந்தாலும்

சிறுகுழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வரும் தற்போதைய காலக்கட்டத்தில் விழிப்புணர்வுக்காக அதை சஸ்பென்ஸ் கலந்த திரைக்கதையாக்கி படமாக தந்திருக்கும் இயக்குனர் மருதுபாண்டியனின் நல்ல மனது மற்றும் முயற்சிக்காக ஒரு முறை தாரளமாக பார்க்கலாம்.