காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்தருளியுள்ள அத்திவரதர் கடந்த 44 நாட்களாக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறைக் காட்சியளிக்கும் அவர் இதற்கு முன் 1979 ஆம் ஆண்டு பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்நிலையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் காட்சியளித்திருப்பதால் அவரை தரிசிக்க இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டவர்கள் விஐபி வரிசையில் அத்திவரதரை தரிசணம் செய்தனர். இந்நிலையில் அவர் மீண்டும் இன்னும் இரண்டு நாளில் குளத்தில் இறங்க இருக்கிறார். பக்தர்கள் இதுவரை செலுத்திய காணிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளன. 44 நாட்களில் அத்திவரதர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மூலம் ரூ.6 கோடியே 81 லட்ச ரொக்க பணமும் 87 கிராம் தங்கமும், 2507 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.