பாகுபலி-2 ஏமாற்றிவிட்டது – மன்சூர் அலிகான் ஓபன் டாக்

பாகுபலி-2 படம் ஒருவகையில் தன்னை ஏமாற்றியுள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான பாகுபலி2 படம் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், வசூலையும் வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ராஜமௌலி தன்னை ஏமாற்றிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் மன்சூர் அலிகான் பேசியதாவது:

பாகுபலி படம் ஒரு சிறந்த சரித்திரப் படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சத்யராஜும், ரம்யாகிருஷ்ணனும் இடம் பெற்றுள்ள சில காட்சிகள் என்னை அழ வைத்துவிட்டது. ஆனால், இந்த படத்தின் இயக்குனர் ராஜமௌலி மீது எனக்கு சில அதிருப்திகள் இருக்கிறது. அவர் நன்றாக தமிழ் பேசுகிறார். தமிழ்நாட்டில் பல நூறு கோடிகளை அப்படம் வசூலித்து வருகிறது. ஆனால், அப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி கூட தமிழ்நாட்டில் எடுக்கப்படவில்லை.

அதேபோல் தமிழ் சினிமா உலகை சேர்ந்த ஒரு துணை நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் கூட இப்படத்தில் பயன்படுத்தப்படவில்லை. அப்படி நடந்திருந்தால், தமிழ் சினிமாவை நம்பியுள்ள பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும். இதை ராஜமௌலி செய்யாதது எனக்கு வருத்தத்தியும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.