பாகுபலி 2- விற்கு வந்த புதிய சிக்கல் – கர்நாடகாவில் வெளியாகுமா?

பாகுபலி 2 படத்தை அதிக விலை கொடுத்து வாங்க கர்நாடக மாநில வினியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருவதால், அப்படத்தின் தயாரிப்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வசூலை அள்ளியது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமான பாகுபலி 2, வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

எனவே, தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இப்படத்தின் வினியோகம் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், கர்நாடகாவில் இப்படத்தை வாங்க ஆளில்லை எனக் கூறப்படுகிறது. காரணம், சமீபத்தில் கர்நாடக பட்ஜெட்டின் போது, சினிமா டிக்கெட்டின் விலை அதிகபட்சம் ரூ.200 எனவும், அதற்கு மேல் விற்கக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.

ஆனால், பல கோடிகள் கொட்டி எடுக்கப்பட்ட பாகுபலி 2 அதிக விலைக்கு வினியோகம் செய்யப்படுவதால், கர்நாடக வினியோகஸ்தர்கள் அப்படத்தை வாங்க தயங்குவதாக தெரிகிறது.

இந்த விவகாரம் இப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பிற்கு கவலையை ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.