‘பாகுபலி’ பிரச்சனைக்காக கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்தார் சத்யராஜ்

01:15 மணி

இயக்குனர் ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி 2’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் கர்நாடகாவில் இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த படத்தில் நடித்த சத்யராஜ் கன்னட மக்களை அவதூறாக கடந்த ஒன்பது ஆண்டுகளுக்க்கு முன் பேசியதாகவும், அவர் மன்னிப்பு கேட்கும்வரை இந்த படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க முடியாது என்றும் கூறப்பட்டது.

இதேபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்ட நிலையில் சத்யராஜ் இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்க மாட்டார் என்றே கூறப்பட்டது. ஆனால் சற்று முன்னர் சத்யராஜ் கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் காவிரி நதிநீர் பிரச்சனையின்போது கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். அந்த சமயத்தில் கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்கள் திரையிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை கண்டித்து தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் பலரும் ஆவேசமாக பேசினர். அவர்களில் நானும் ஒருவன்.

அந்த கண்டனக்கூட்டத்தில் நான் பேசிய சில வார்த்தைகள் கன்னட மக்களின் மனதை புண்படுத்தியதாக அறிகிறேன். நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல. 35 ஆண்டுகளாக என்னுடைய உதவியாளராக இருக்கும் திரு சேகர் என்பவரின் தாய் மொழி கன்னடம். கடந்த ஒன்பது வருடங்களில் ‘பாகுபலி’ உள்பட சுமார் 30 திரைப்படங்கள் கர்நாடகாவில் வெளியாகியுள்ளது. அப்போதெல்லாம் எந்த பிரச்சனையும் வரவில்லை. ஒருசில கன்னட படத்தில் நடிக்க அழைப்பும் வந்தது. ஆனால் நேரமின்மை காரணமாக நடிக்க முடியவில்லை

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த கண்டன கூட்டத்தில் நான் பேசியதை தற்போது பார்த்து நான் பேசிய சில வார்த்தைகள் கன்னட மக்களின் மனம் புண்படுத்தியதாக கருதுவதால் அந்த சில வார்த்தைகளுக்காக ஒன்பது வருடங்களுக்கு பின்னர் நான் கன்னட மக்களிடம் எனது மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த முடிவால் என நல விரும்பிகளும் தமிழக மக்களும் வருத்தம் கொள்ள வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

பாகுபலி என்ற மிகப்பெரிய படத்தின் மிகச்சிறிய தொழிலாளிதான் நான். என் ஒருவனால் பல ஆயிரம் தொழிலாளிகளின் உழைப்பும், பணமும் விரயமாவதை நான் விரும்பவில்லை. பாகுபலி 2 படத்தின் கர்நாடக மாநில உரிமையை பெற்ற விநியோகிஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை.

ஆனாலும் இனிவரும் காலங்களில் தமிழின மக்களின் பிரச்சனையாக இருந்தாலும் சரி, காவிரி நதிநீர் பிரச்சனையாக இருந்தாலும் சரி, விவசாயிகள் பிரச்சனையாக இருந்தாலும் சரி தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று உறுதி கூறுகிறேன். இந்த சத்யராஜை வைத்து படமெடுத்தால் எதிர்காலத்தில் தொல்லைகள் வரும் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள் தயவுசெய்து என்னை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் ஒரு நடிகனாக இருப்பதை விட, இறப்பதைவிட எந்தவிதமான மூட நம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும்தான் எனக்கு பெருமை மற்றும் மகிழ்ச்சி

எனது மனப்பூர்வமான வருத்தத்தை ஏற்றுக்கொண்டு பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட ஒத்துழைக்குமாறு கன்னட மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சத்யராஜ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

(Visited 15 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393