கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தற்போது மகேஷ் பாபுவை வைத்து ‘ஸ்பைடர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், அடுத்ததாக இவர் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது.

விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மெர்சல்’ படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் ‘பாகுபலி’ ஹீரோ பிரபாஸை சந்தித்து ஒரு கதையை அவரிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதை பிரபாஸுக்கு பிடித்துப் போய்விட்டதாகவும், அதில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் – பிரபாஸ் இணையும் அந்த படம் பாகுபலிக்கு இணையாக பல மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறதாம். விஜய் படத்திற்கு பிறகு இருவரும் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது. பிரபாஸ் தற்போது தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.