பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்ட மகிழ்மதி அரண்மனை

இந்திய திரையுலகில் தனி முத்திரை பதித்த படம் என்றால் அது ‘பாகுபலி’யைத்தான் சொல்ல வேண்டும். இரண்டு பாகங்களாக வெளிவந்த ‘பாகுபலி’ இந்திய சினிமாவில் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டாலும், சில பிரம்மாண்டமான அரங்குகளும் உருவாக்கப்பட்டன.

மகிழ்மதி அரண்மனை, குந்தல தேசத்தின் அரண்மனை, மகிழ்மதியின் முன்னால் வானுயர்ந்த பல்லல தேவாவின் வெண்கல சிலை ஆகியவை கலை இயக்குனர்களால் உருவாக்கப்பட்டன. இதற்கு கலை இயக்குனர் சாபு சிரில் தலைமை தாங்கியிருந்தார். பலகோடி ரூபாய் செலவில் உருவான இந்த அரங்குகள் எல்லாம் படத்தில் பார்க்கும்போது அனைவருக்கும் வியப்பாய் இருந்தது.

‘பாகுபலி’ இரண்டு பாகம் மட்டுமே உருவாகும் என்று அதன் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஏற்கெனவே அறிவித்திருந்தார். எனவே, இனிமேல் அங்கு எந்த படப்பிடிப்பும் நடத்தவேண்டிய சூழ்நிலை இல்லாததால் தற்போது பொதுமக்கள் பார்வைக்காக அந்த அரங்குகள் திறந்துவிடப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில்தான் இந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி அறிந்ததும் அந்த அரண்மனையை பார்க்க பொதுமக்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் வருகை தந்த வண்ணம் உள்ளனர். வருங்காலத்தில் ஐதராபாத்தின் அடையாளமாகவும் இந்த அரண்மனை அமைய வாய்ப்புள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.