24 மணி நேரத்திற்கு முன்பே இணையத்தில் லீக் ஆன ‘பாகுபலி 2’: அதிர்ச்சியில் படக்குழு

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி 2’ திரைப்படம் முதல்முறையாக ரூ.1000 கோடி வசூலாகும் இந்திய திரைப்படம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த படத்தின் முன்பதிவில் இருந்தே இந்த படம் முதல் நாளில் ரூ.100 கோடி வசூலை நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் இரண்டு நிமிட காட்சிகள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் ராணாவின் போர்க்காட்சிகளும் சத்யராஜ் மற்றும் பிரபாஸ் எதிரிகளின் தலைகளை பந்தாடும் காட்சிகளும் உள்ளன.

இந்த படத்தின் எந்த ஒரு காட்சியும் லீக் ஆகிவிடக்கூடாது என பலத்த பாதுகாப்பு போட்டிருந்தும் இந்த காட்சிகள் எப்படி லீக் ஆகியது என்பது புரியாமல் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியின்போது அல்லது பிரிவியூ தியேட்டரில் படம் போடும்போது மர்ம நபர்கள் இந்த படத்தின் காட்சிகளை செல்போனில் பதிவு செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து படக்குழுவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலிசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.