‘பாகுபலி 2’ படத்தின் முதல் காட்சி திடீர் ரத்து

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் சுமார் 9000 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. இந்த படத்திற்கான ஒருவார டிக்கெட்டுக்கள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன.

இந்த நிலையில் இந்த படத்தின் ஸ்பெஷல் காட்சிகள் உலகின் முக்கிய நகரங்களில் இன்று மாலை திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. அதைபோலவே மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் பாலிவுட் பிரபலங்கலுக்காக இன்று மாலை சிறப்பு காட்சி ஒன்றுக்கு ‘பாகுபலி 2’ படத்தின் இந்தி உரிமையை பெற்ற கரண்ஜோஹர் ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால் இன்று பழம்பெரும் பாலிவுட் நடிகர் வினோத்கண்ணாவின் திடீர் மறைவை அடுத்து இந்த சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டது. இந்த தகவலை கரண்ஜோஹர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் முன்பே முதல் காட்சியாக இன்று மாலையே ‘பாகுபலி 2’ படத்தை பார்த்துவிடலாம் என்று ஆசையாக இருந்த பாலிவுட் பிரபலங்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்துவிட்டது.