வர்மா படத்தை கை விடுவதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அப்படத்திலிருந்து தானே விலகியதாக இயக்குனர் பாலா கூறியுள்ளார்.

தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். இந்த விவகாரம் தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய விருது பெற்ற இயக்குனரான ’பாலா’ இது ஒரு பெருத்த அவமானமாகவே கருதப்பட்டது.

இந்நிலையில், இயக்குனர் பாலா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் அதில் “ வர்மா படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்ட தவறான தகவலால், இந்த விளக்கத்தை தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கேன். படைப்பு சுதந்திரம் கருதி, வர்மா படத்திலிருந்து விலகிக்கொள்வது என்பது நானாக எடுத்த முடிவு. துருவின் எதிர்காலம் கருதி அதை பற்றி பேச விரும்பவில்லை. கடந்த ஜனவரி 22-ம் தேதியே தயாரிப்பாளருடன் இதற்காக செய்துகொண்ட ஒப்பந்தம் தங்களின் கனிவான பார்வைக்கு எனக்கூறி அந்த ஒப்பந்தத்தையும் வெளியிட்ட்டுள்ளார்.

அதில், படத்தில் இருந்து பாலா விலகுவதாகவும், தயாரிப்பு நிறுவனம் எந்த மாற்றத்தையும் செய்து கொள்ளலாம் என பி ஸ்டுடியோ சார்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், பாலாவின் பெயர் இந்த படம் தொடர்பான எந்த விஷயத்திலும் குறிப்பிடக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.