ரஜினியின் அடுத்த படத்தில் எழுத்தாளர் ‘பாலகுமாரன்’?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கரின் இயக்கத்தில் ‘2.0’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் முதல் ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தயாரிப்பாளர் தனுஷ் ஏற்கனவே தொடங்கிவிட்டார். ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி, வில்லன் மற்றும் மற்ற நட்சத்திரங்களின் தேர்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் வசனம் எழுதுவார் என்று செய்திகள் வெளிவந்தது. ‘பாட்ஷா’ படத்திற்கு பாலகுமாரன் எழுதிய வசனம் இன்றும் புகழ் பெற்று இருப்பதால், இந்த படத்திற்கும் அவர் எழுத வேண்டும் என்று இயக்குனர் விரும்பியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் எழுத்தாளர் பாலகுமாரனை தனுஷ் சந்தித்துள்ளார். அவருடன் ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவிரைவில் ‘ரஜினி 161’ படத்தில் பாலகுமாரன் பணிபுரிவது குறித்த செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.