Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் தமிழில் வந்த சிறந்த ஹாரர் படங்கள் ஒரு பார்வை

தமிழில் வந்த சிறந்த ஹாரர் படங்கள் ஒரு பார்வை

திகில் படம் எடுப்பதற்க்கும் ஒரு தனித்திறமை வேண்டும். ஏனென்றால் பழைய கால விட்டாலாச்சார்யா படம் போல் பேய் அடுப்பில் கால்களை வைத்து பலகாரம் சுட்டுக்கொண்டிருந்தால் சிரித்துவிட்டு போய்விடுவார்கள். மக்கள்,

மக்களை சீட்டிலேயே கட்டிப்போட்ட திகில் திரைப்படங்கள் உள்ளனவா, சில ஆங்கில படங்களுக்கு அத்தகைய வலிமை உண்டு.

உண்மையில் சில ஆங்கில பேய்ப்படங்களை பார்த்து தியேட்டரிலேயே மரணித்தவர்கள் எல்லாம் உண்டு

சில நாள் முன் கூட ஆந்திராவை சேர்ந்த ஒரு நபர் திருவண்ணாமலையில் காஞ்சுரிங் 2 ஆங்கில திரைப்படத்தை பார்த்து தியேட்டரிலேயே அதிர்ச்சியில் உறைந்து இறந்துவிட்டார்.

இப்படிப்பட்ட அளவு திகில் திரைப்படங்கள் தமிழில் வந்துள்ளனவா அவை எந்த அளவு மக்களை பயத்தில் ஆழ்த்தியது என்பதற்காக இந்த சிறப்பு பதிவு.

யார் நீ என்றொரு திரைப்படம் மழை பெய்யும் இரவு வேளையில் டாக்டரான ஜெய்சங்கருக்கு ஓர் அவசர மருத்துவ அழைப்பு வர ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு சென்றதும் அங்கு ஒரு பெரியவர் பாழடைந்த பங்களாவுக்கு அழைத்து செல்ல அங்கு ஒரு வயதான அம்மா தலைவிரி கோலமாக என் மகள் செத்து போயிட்டாளே என ஒரு இளம்பெண்ணின் உடலை வைத்து அழுது கொண்டிருக்க திடீரென

அவர்கள் மறைந்து விட பார்க்கும் நமக்கே வேப்பிலை அடிக்கும் அளவுக்கு பயத்தை உண்டு செய்திருப்பார்கள் இவ்வளவிற்க்கும் ஒரு கோரமான காட்சிகள் கூட படத்தில் இருக்காது

இறுதியில் ஒரு திருட்டுக்கும்பல் செய்த மேஜிக் வேலை என படத்தை முடிப்பார்கள் முடிப்பதற்குள் நம்மை ஒரு வழி செய்து கடைசி வரை திகிலோடு சேர்ந்தே படம் பயணிக்கும்.

போன ஜென்மத்து ஜமீன் தன் மகனை குடிசைவாசி ஒருவரின் மகள் காதலிப்பதை விரும்பாமல் தொந்தரவு செய்கிறார் எல்லோரும் மடிகிறார்கள் ஜமீன் 100 வயதுக்கு மேல் ஆகியும் அங்கேயே இருக்கிறார்.

இறந்து போனவர் மறுபிறப்பு எடுத்து அதே ஊருக்கே வந்து அமானுஷ்ய தோற்றத்துடன் மிக வயதாகி கூனி குறுகி போயுள்ள தனது தந்தை ஜமீன் நம்பியாரை பார்க்கிறார். கடும் பயம் இப்படத்தில் இல்லை என்றாலும் ஒரு அமானுஷ்யம் கலந்து மென்மையான காதலை சொன்ன திகில் படம் இது என்று சொன்னால் மிகையாகாது. இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் நெஞ்சம் மறப்பதில்லை படம் இது.

மறைந்த இயக்குனர் ஏசி திருலோகச்சந்தர் அவர்கள் இயக்கிய அன்பே வா திரைப்படத்திற்கு போட்ட செட் வீணாகி விட வேண்டாம் என ஏவிஎம் செட்டியார் அவர்கள் விருப்பத்தின் பேரில் செட்டுக்காக சிம்பிள் பட்ஜெட்டில் போட்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் அதே கண்கள்.

மிகுந்த வசூலை வாரி தந்த படம், தொடர் கொலைகள் ஒரு வீட்டில் நடக்க அதை கண்டுபிடிக்க ஒரு ஹீரோ, கடைசி வரை யார் கொலை செய்கிறார் என டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் வச்சு கடைசியில் ஒரு வயதான நபரை யாரும் எதிர்பாராமல் பிடிப்பார் ஹீரோ ரவிச்சந்திரன்.

முதல் காட்சியிலேயே இந்த படத்தின் கதையை யாரிடமும் கூற வேண்டாம் என டுவிஸ்ட்டோடுதான் படத்தை ஆரம்பிப்பார்கள். மிக சிறந்த திகில் படம் இது வா அருகில் வா என்ற இப்படத்தின் ஒரு பாடல் மிகுந்த அமானுஷ்ய உணர்வை நமக்கு ஏற்படுத்தும்.

இயக்குனர் பாரதிராஜா கிராமிய படங்களாக எடுத்து ஹிட் அடித்துக்கொண்டிருந்த வேளையில் ஒரு தீபாவளி திருநாளில் ரிலீஸ் ஆன திரைப்படம்தான் சிகப்பு ரோஜாக்கள், படத்தின் முதல் காட்சியில் உட்கார்ந்த பார்வையாளர்கள் மிகுந்த குழப்பத்துக்கு உள்ளாகி இருப்பார்கள், மர்ம சம்பவங்களாக தொடர்ந்து நடக்கும். இறுதியில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஒருவன் பெண்கள் மீது வன்மம் கொண்டு கொலை செய்வதை விரிவாக விவரிக்கும் படம். படத்தின் ஒரு காட்சியில் தனது கணவர் கமல் மோசமானவர் கொலைகாரன் என்பதை கண்டுபிடிக்கும் ஸ்ரீதேவி ஜன்னல் வழியாக எட்டி பார்க்கும்போது ஒரு கை ஒன்று பூமிக்குள் இருந்து ரத்ததோடு வரும் பாருங்கள் பின்னாலேயே ஒரு அமானுஷ்ய சத்தமாக இசைஞானி இளையராஜா அவர்களின் பின்னணி இசை வரும் பாருங்க சும்மா மிரட்டிருப்பாருங்க. அவ்வளவு திகிலான த்ரில்லர் படம்தான் இந்த சிகப்பு ரோஜாக்கள். உண்மையில் மும்பையில் இது போல தொடர் கொலைகளை செய்து 95ம் ஆண்டு மறைந்த ராமன் ராகவ் என்ற கொலைகாரன் என்ற நபரை வைத்து உருவாக்கப்பட்ட கதையே இது.

துணிவே துணை என்றொரு திரைப்படம் எஸ்,பி முத்துராமன் அவர்கள் இயக்கியது ஒரு குறிப்பிட்ட ஊருக்கு செல்லும் அதிகாரி அங்கு ஒரு பாழடைந்த ஒரு ரயில்வே ஸ்டேஷன் அங்கு நடமாடும் ஸ்டேஷன் மாஸ்டர் மகனின் ஆவி இதை கண்டு அங்கிருந்து பயந்து ஓடும் நபரை ஏற்றிக்கொண்டு ஒற்றையடிப்பாதையில் செல்லும் குதிரைவண்டிக்காரன் என முதல் பத்து நிமிடங்கள் விறுவிறுப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றிருப்பார் இயக்குனர் ஆனால் படத்தில் பத்து நிமிடம் மட்டுமே இக்காட்சிகள் வரும் பிறகு வேறு ஒரு திசையில் கதை பயணிக்க ஆரம்பித்து விடும்.

இதே போல் எஸ்.பி முத்துராமன் அவர்கள் இயக்கிய கழுகு படமும் அவ்வகையை சேர்ந்தது படம் முழுவதும் திருநெல்வேலி செங்கோட்டை புனலூர் போன்ற இயற்கை கொஞ்சும் ஏரியாக்களில் எடுக்கப்பட்டிருக்கும்.

திருமணமான புதுமணத்தம்பதி ஒரு சொகுசு பஸ்ஸில் காட்டுக்குள் நண்பர்களுடன் செல்ல அங்கு ஒரு நரபலிக்கும்பலிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் காட்சிகளை விறுவிறு சுறுசுறுவென சொல்லி இருப்பார்கள்.

கனவுல கண்டது நேர்ல நடக்குமா? நடக்கிறது ஒரு பெண்ணுக்கு அதுவும் சாதாரண கனவல்ல கொலை நடப்பது போன்ற கனவு, இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் இயக்கத்தில் வந்த நூறாவது நாள் படத்தின் ஒன் லைனே அது.

சாதாரண கதையை பட்டை தீட்டிய வைரம் போல் தீட்டி திகிலின் உச்சத்துக்கே நம்மை இழுத்து சென்றிருப்பார்.

ஊட்டி பேக் டிராப் கொலைகள் என ஓப்பனிங் சீனிலேயே திகிலில் மிரட்டி இருப்பார் இயக்குனர்.

முன்னதாக இந்த படத்தை பார்த்துவிட்டு வந்துதான் மிகப்பெரும் கொலையாளியான ஆட்டோ ஷங்கர் கொலை செய்து பெண்களை சுவருக்குள் புதைத்தார் எனவும்

தனது அக்கா குடும்பத்தையே கொலை செய்து வீட்டுக்குள் பூட்டி வைத்த ஜெயப்பிரகாஷ் என்பவரும் இந்த படம் பார்த்துதான் கொலை செய்தனர் என இருவேறு கருத்துக்கள் உலவுகின்றன.

தமிழில் வந்த திக் திக் த்ரில்லர் படங்களில் புலன் விசாரணை படமும் விஎம்சி கொச்சின் ஹனிபா அவர்கள் இயக்கிய பகலில் பவுர்ணமி திரைப்படமும் இன்னுமே அதாவது படம் வந்து சில வாரங்களில் டிவியில் போடும் இந்த நவீன யுகத்திலும் டிவி ரைட்ஸ் இல்லாத படங்கள் மிக அருமையான ஹாரர் படங்கள் இவை.

அதில் புலன் விசாரணையாவது இணையங்களில் கிடைக்கிறது பகலில் பவுர்ணமி திரைப்படத்தின் ஒரு சின்ன காட்சியைக்கூட இணையத்தில் பார்க்க முடியாது.

இயக்குனர் தக்காளி சீனிவாசன் என்பவரின் இயக்கத்தில் வந்த படம்தான் நாளைய மனிதன் நிச்சயமாக ஆங்கில படத்தின் தாக்கம் இல்லாமல் இந்த கதை வந்திருக்காது இறந்து போன மனிதனை பிழைக்க வைக்கும் டாக்டர் அதனால் ஏற்படும் விளைவுகளை திகில் கடந்து சொல்லி இருப்பார்.

இறந்து போய் பிழைத்த ஒரு மனிதனின் அட்டகாசத்தை ஒடுக்க இறுதிக்காட்சியில் கதாநாயகன் பிரபுவும் அமலாவும் தீயை வைத்து அவனை எரிப்பார்கள். அதோடு முடிந்த படம் இரண்டாம் பாகமாக அதிசய மனிதன் என்று தலைப்பிட்டு வந்தது.

பல வருடத்துக்கு முன் பிரபு அமலாவால் அரைகுறையாக எரிக்கப்பட்ட நாளைய மனிதன் உடல் முழுவதும் அகோரமாகி வந்து சுற்றுலா விடுதியில் தங்கி இருக்கும் காதல் ஜோடிகளை கொல்வது போல் வந்தது வேலு பிரபாகரன் இயக்கி இருந்தார்.

இம்முறை இவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிழல்கள் ரவி சுட்டு வீழ்த்துவது போலவும் அதற்கும் அடங்காத மனிதன் எலும்பு மனிதனாக வருவது போலவும் இப்படத்தின் மூன்றாம் பாகம் எலும்பு மனிதன் என்ற பெயரில் வரும் என்றும் படத்தின் இறுதியில் அறிவிக்கப்பட்டது. 27 வருடங்களுக்கு பிறகும் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் என்று டூயட் பாடிக்கொண்டிருந்த வெள்ளிவிழா நாயகன் என்று அழைக்கப்பட்ட மோகன் நடிகை பல்லவி தயாரிப்பில் ஜி.எம் குமார் அவர்கள் இயக்கத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் உருவம்.

மோகனின் அழகிய உருவத்தை சிதைத்து எடுத்திருப்பார்கள். படத்தின் இறுதிக்காட்சி வரை மிரட்டல்தான் பில்லி,சூனியம் என மனித வாழ்வில் சொல்லப்படும் சில விஷயங்களை வைத்து இயக்கப்பட்ட படம்.

மோகனை சிதைத்ததாலோ என்னவோ படம் போதிய வெற்றி பெறவில்லை.இப்படத்தோடு பல நூறு நாள் படங்களை கொடுத்த நடிகர் மோகனின் சினிமா வாழ்வு முடிவுக்கு வந்தது.

இது போல போதிய பொழுது போக்கு இல்லாத அக்காலத்தில் 13ம் நம்பர் வீடு,ராசாத்தி வரும் நாள், மைடியர் லிசா,என பலதரப்பட்ட பேய்ப்படங்கள் ரசிகர்களை பயத்தில் ஆழ்த்தியது.

யார் என்ற திரைப்படம் கண்ணன் என்பவர் இயக்கியது தற்போதைய கலைப்புலி தாணுவின் ஆரம்பகால தயாரிப்பு.  உலகை ஆளவிருக்கும் சாத்தான் என்ற ரீதியில் வித்தியாசமான பின்னப்பட்டிருக்கும் கதை.முதல் காட்சியில் ஆரம்பித்து கடைசி காட்சி வரை நம்மை தியேட்டர் ஸ்க்ரீனோடு சேர்த்து கட்டிப்போட்ட படம் அடுத்தடுத்த காட்சிகள் விறுவிறுப்பின் உச்சக்கட்டமாக இருந்தது.

அகால மரணமடையும் நிறைவேறாத ஆசையுடன் அலையும் ஆத்மாக்கள் தான் விரும்பும் உடலில் எங்கிருந்தாலும் எந்த ஊரில் இருந்தாலும் அவர்களுடன் சென்று சேரும் தன் ஆசையை சொல்ல முயற்சி செய்யும் என ஆவிகள் உலகம் பற்றி ஆராய்ச்சி செய்யும் நபர்கள் கூறுவார்கள்.

அப்படி ஒரு அடிப்படையில் இயல்பான கிராமத்து மண்வாசனையுடன் சொல்லப்பட்ட படம் ஊருவிட்டு ஊரு வந்து. சிங்கப்பூரில் கொல்லப்பட்ட ஒரு பெண் ஒரு கிராமத்துக்கு வந்து கதாநாயகனின் மனைவியின் உடலில் புகுந்து வீண் பழிசுமந்து சிங்கப்பூர் ஜெயிலில் தூக்குத்தண்டனை கைதியாக இருக்கும்  கதாநாயகனின் வயதான அப்பாவை காப்பாற்றுவதாக கதை.

ஆவி புகுந்த பெண்ணாக கெளதமி அவர்கள் எந்தவித மேக்கப்பும் இல்லாமல் கோரம் இல்லாமல் இயல்பு நிலையிலேயே மிரட்டி இருப்பார் இப்படத்தில்.

இரண்டாயிரங்களுக்கு பின் வந்த படங்களில் ரஜினிகாந்த் ,ஜோதிகா நடிப்பில் வந்த சந்திரமுகியை கூறலாம்.

2004ம் ஆண்டு இப்படம் வந்தது. ஏற்கனவே மலையாளத்தில் பாசில் அவர்கள் இயக்கிய மணிசித்ரதாழுவே பி.வாசுவின் முயற்சியால் கன்னடத்தில் ஆப்தமித்ராவாக வந்து தமிழில் சந்திரமுகியாக வந்தது.

மூன்று மொழிகளிலுமே படம் ஹிட்.இருந்தாலும் மலையாளத்தில் வந்த பெரும்பகுதி காட்சிகளை தமிழுக்கேற்றபடி மாற்றினார் இயக்குனர் வாசு அவர்கள்.

தமிழில் ஜோதிகா மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போன மனிதர்களை தானாக உருவகப்படுத்தி கொள்வது என்ற கதாபாத்திரத்தின் அடிப்படையில் சந்திரமுகியாக மிரட்டி இருந்தார்.

இதே படம் மலையாளத்தில் ஏற்கனவே வந்திருந்தபோது நடிகை ஷோபனா அவர்கள் நாகவல்லி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி 94 ஆம் ஆண்டிற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இரண்டாயிரங்களின் இறுதியில் நடிகர் லாரன்ஸ் இயக்கத்தில் வந்த முனி படம் மிரட்டியது. நடிகர் ராஜ்கிரண் அவர்கள் பேயாக நடித்திருப்பார்.

அதாவது மிகப்பெரும் வீரன் ஒருவன் யாராலுமே அடிக்க முடியாத ஒருவன் பேயாக வந்தால் எப்படி இருக்கும் அப்படி ஒரு வித்தியாசமான திகில் படமாக வந்தது.

இந்த படத்தின் இரண்டாம் பாகமாக காஞ்சனா வந்தது முதல் படத்தின் கதை போலவே இந்த படத்தின் கதையும் அமைந்தது. அதாவது வலிமையுள்ள திருநங்கையாக சரத்குமார் நடித்திருந்தார்.

அவரே உடலில் புகும் ஆன்மாவாகவும் நடித்து வில்லன்களை பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மற்ற எந்த இயக்குனரும் நடிகரும் கொடுக்காத வகையில் லாரன்ஸ் அவர்கள் தன் எல்லா பேய் படத்திலும் காமெடிக்கு முக்கியத்துவம் அளித்திருந்தார்.

யாரும் எதிர்பாராத வகையில் காஞ்சனா 2 வரை அவரின் அடுத்தடுத்த பாகங்கள் ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பியது.

கடந்த 2008 ம் ஆண்டு வந்த திரைப்படம் யாவரும் நலம்  நடிகர் மாதவன் நீது சந்திரா நடிப்பில் வந்தது விக்ரம் குமார் இயக்கி இருந்தார். ஆத்மாக்கள் தான் நினைக்கும் எந்த ஒரு பொருளையும் ஊடக சக்தியாக பயன்படுத்தும் என்ற அடிப்படையில் டிவியில் புகுந்து வரும் ஒரு குடும்பத்தில் கொடூரமாக மரணமடைந்த ஆன்மாக்கள் என திக் திக் என சீட்டின் நுனிக்கே சென்ற நம்மை கடைசி வரை அங்கேயே உட்கார வைத்திருப்பார்.

தமிழ் பேய்ப்படங்களில் வித்தியாசமானதொரு திரைக்கதையுடன் மிகுந்த பரபரப்புடன் இயக்கப்பட்டிருக்கும் படம் இது ஒன்றாகவே இருக்க முடியும்.

இவ்வளவு படங்களை அதாவது 20 வருடங்களுக்கும் மேலான படங்களை மேலே தொகுத்து எழுதி இருக்கிறேன் இந்த இருபது வருட படங்களும் ஒரே வருடத்தில் வந்தால் எப்படி இருக்கும் அப்படி ஒரு வருடமாக 2014,2015ம் வருடங்கள் மாறின.

இதில் சொல்ல முடியாத அளவு திகட்ட திகட்ட பேய்ப்படங்கள் வந்து குவிந்தன சில படங்கள் பேய்ப்படம் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற அடிப்படையில் ஏனோ தானோ வென்று வந்தது.

நடிகை நயன் தாரா நடித்து வெளிவந்த மாயா திரைப்படம் வித்தியாசமானதொரு திகில் திரைப்படம் யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ் என அருமையாக இருந்தது.

மிக குறுகிய பட்ஜெட் படமாக சத்தமே இல்லாமல் வந்த படம் ஆ என்ற படம் பேய்களில் இவ்வளவு வெரைட்டியா என மிரள வைத்த படம், பாலைவனத்து மோகினி துபாய் ஷேக்குடன் குடும்பம் நடத்துவது, ஏடிஎம் அருகே இறந்தவர் ஏடிஎம் மெஷின் அருகேயே பேயாக அலைவது என வித்தியாசமான பலவித வெரைட்டி பேய்களை காண்பித்து மிகுந்த பரபரப்பு திரைக்கதையை இப்படத்தின் இயக்குனர் உருவாக்கி இருப்பார். பெயர் சொல்லும் அளவு நட்சத்திர பட்டாளம் இல்லாததால் இப்படம் போதிய வெற்றியை பெறவில்லை.

அதே போல் டிமாண்டி காலனி என்றதிரைப்படம் இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்கள் இயக்கத்தில் வந்த திரைப்படம். கடந்த 2015ம் ஆண்டு வந்த திரைப்படம். தியேட்டரில் சென்று பார்த்தவர்கள் உண்மையில் நடு நடுங்கித்தான் போனார்கள் அப்படி ஒரு பயம் பார்வையாளர்களை தொற்றிக்கொண்டது.ஒரு அறைக்குள் மாட்டிக்கொள்ளும் மூவர் அவர்களை துரத்தும் வெள்ளைக்காரரின் கொடூர ஆவி ஒரு அறைக்குள்ளேயே கடைசி வரை நாமும் பயணித்த அனுபவம் வித்தியாசமானதொரு மிரட்டல்.இன்றும் சென்னையில் டிமாண்ட்டி காலனி இருக்கிறது. இந்த டிமாண்டி காலனியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வெள்ளைக்காரரின் ஆவி இருப்பதாகவும் செவி வழி கதைகள் உலவுகிறது.

பொதுவான ஒரு கருத்து என்னவென்றால் பயப்படும் நபர் யாராக இருந்தாலும் திகில் படங்கள்,பேய்ப்படங்களை விரும்பி பார்ப்பார்கள் அந்த படங்களை பார்த்துவிட்டு பயப்படுவதும் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான செயல். ஏதாவது பரபரப்பாக இருக்க வேண்டும் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் அதிகம் அவர்களுக்காக வருவதே இந்த திகில் படங்களும் பேய்ப்படங்களும் இதில் பேய்ப்படங்களையும் திகில் படங்களையும் கடைசிவரை சிறப்பான திரைக்கதை அமைத்து இயக்கியவர்கள் தமிழ் சினிமாவில் மிகவும் குறைவே. இண்டர்வெல் வரை பரபரப்பாகவும் அல்லது க்ளைமாக்ஸிலோ சென்று சொதப்புவார்கள்.மேற்குறிப்பிட்ட படங்கள் அனைத்தும் ஓரளவு திகில் பட பிரியர்களை திருப்தி படுத்திய படங்கள் என தாரளமாக கூறலாம்.