திமுக தலைவர் கருணாநிதிக்கு நாட்டின் மிகப்பெரிய உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் இன்று வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசியுள்ளார் திருச்சி சிவா.

இது தொடர்பாக அவர் மாநிலங்களவையில் பேசியதாவது, இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும் திராவிடத்தின் வலிமைவாய்ந்த தலைவருமான கலைஞர் 80 ஆண்டுகள் பொதுச்சேவை புரிந்துள்ளார். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பட பெரும் பங்காற்றிய அவர் 50 ஆண்டு காலம் திமுகவின் தலைவராக இருந்துள்ளார்.

கலைஞர் தலைசிறந்த பேச்சாளர், எழுத்தாளர், கதாசிரியர், தத்துவவாதி மற்றும் நடிகர். 80 படங்களுக்கு அவர் திரைக்கதை எழுதியுள்ளார். அவரது வாழ்க்கையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சமூக நீதி, மதச்சார்பின்மை, சுய மரியாதை போன்றவற்றிற்காக தனது வாழ்நாளின் கடைசி மூச்சு வரை போராடியவர்.

சொத்துக்களில் பெண்களுக்கு சம உரிமை, விதவைகள் மறுமணம், திருநங்கைகளுக்கு திட்டங்கள் என பல்வேறு புரட்சிகளை அவர் செய்துள்ளார். கைரிக்சாவை ஒழித்தவர். கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளாதவர். எனவே, அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும். அவரது சாதனைகளுக்கு அதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என தெரிவித்தார் திருச்சி சிவா.

கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. ஆனால் இதனை கலைஞரின் கொள்கைக்கு முரண்பாடுள்ள பாஜக அரசு நிறைவேற்றுமா என்பது கேள்விக்குறியே?…