மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என அதிமுக எம்பி மைத்ரேயன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மைத்ரேயன் எம்பி தனது முகநூல் பக்கத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், 2016 டிசம்பர் 29-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. மேலும் 2017-ஆம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் அதிமுக எம்பிக்கள் சார்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஜெயலலிதா மறைந்து 600 நாட்களை கடந்துள்ள நிலையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அதிமுகவினரும், தமிழக மக்களும் எதிர்பார்த்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.