மீண்டும் பாலிவுட்டுக்கு செல்லும் பரத்…

பொட்டு திரைப்படம் மூலம் நடிகர் பரத் மீண்டும் பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கிறார்.

சவுகார்பேட்டை படத்தை இயக்கிய வடிவுடையான் அடுத்து இயக்கியுள்ள படம் பொட்டு. அதில் சிருஷ்டி டாங்கே, இனியா, நமீதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் கதை, ஒரு மருத்துவக் கல்லூரியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டில் ஒரு ஏழைப்பெண்ணிற்கு அந்த கல்லூரியில் சீட் கிடைக்கிறது. ஆனால், அவரை அங்கிருந்து விரட்டி விட்டு, அந்த இடத்தை விற்பனை செய்ய கல்லூரி நிர்வாகம் நினைக்கிறது. அவர்கள் கொடுக்கும் டார்ச்சரால், மாணவி இனியா தற்கொலை செய்து கொள்கிறார். அதன் பின் அவர் பரத்தின் உடம்பில் புகுந்து எதிரிகளை பழிவாங்குகிறார். சில காட்சிகளில் பெண் வேடத்திலும் பரத் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. ஏற்கனவே ஜாக்பாட் என்கிற படம் மூலம் பாலிவுட்டில் நுழைந்த பரத்திற்கு, இது இரண்டாவது பாலிவுட் படமாகும்.