தமிழகத்தின் நிலப்பரப்பு என்ன? கடன் என்ன? வருமானம் என்ன? என்று கூட தெரியாத ரஜினி, ஏன் தமிழக அரசியலுக்கு வருகிறார்? என இயக்குனர் பாரதிராஜா நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:

தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் யாரும் கொல்லைப்புறம் வழியாக உள்ளே நுழைய முடியாது. தமிழர்களுக்குள் மத வழிபாட்டு முறைகள் வெவ்வேறாக உள்ளன. தமிழர்கள் சிதறுண்டு கிடக்கிறார்கள்.

நாம் ஒன்றுபட்டு இருந்தால் எச்.ராஜா போன்றவர்கள் இப்படி பேச முடியுமா? நாளை தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் யாரும் உள்ளே வர முடியாது.

பெரியாரை பற்றி பேசும் அளவுக்கு பலருக்கும் தைரியம் வந்ததற்கு காரணம் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாததுதான்.

ஜெயலலிதா துணிச்சலானவர். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்வார். வைரமுத்தோ, பாரதிராஜாவோ தனி மனிதர்கள் அல்ல. வைரமுத்துவை தொட்டால் வைகையை தொட்டது போல் அர்த்தம்.

எனவே தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பேசுபவர்கள் கர்நாடகத்தில், கேரளாவில் போய் பேச முடியுமா?

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று கூட சொல்லாத ரஜினி ஏன் தமிழக அரசியலுக்கு வருகிறார்? அவருக்கு தமிழகத்தின் நிலப்பரப்பை பற்றி தெரியாது. தமிழகத்தின் வருமானம், கடன் தெரியாது. பிறகு எதற்காக ரஜினி அரசியலுக்கு வருகிறார்? இவ்வாறு அவர் பேசினார்.