விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கி வெளிவந்த ‘சண்டக்கோழி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இரண்டாம் பாகத்திலும் விஷால் நடிக்க லிங்குசாமியே இயக்குகிறார். மேலும், இப்படத்தை விஷால் தனது சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கவும் செய்கிறார்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், இப்படத்திற்காக சென்னை பின்னி மில்லில் 10 ஏக்கர் பரப்பளவில் மதுரை போன்று செட் ஒன்றை அமைக்கிறார்கள். 500 கடைகள், கோயில் திருவிழா, கொண்டாட்டம் முதலான காட்சிகளை படமாக்குவதற்காக அமைக்கப்படும் இந்த பிரம்மாண்ட செட்டுக்கான செலவு மட்டும் ரூ.6 கோடி என்கிறார்கள்.

இந்த அரங்க அமைப்பதற்கான பணி இன்று காலை பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜையின்போது விஷால் பிலிம் பேக்டரியின் இணை தயாரிப்பாளரான எம்.எஸ்.முருகராஜ், இயக்குனர் லிங்குசாமி, கலை இயக்குனர் ராஜீவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்படத்திற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில், இதில் மேலும் யார், யார் நடிக்கிறார்கள் என்கிற விவரத்தை கூடிய விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, முந்தைய பாகத்தில் நடித்த மீரா ஜாஸ்மின் இப்பாகத்திலும் நடிக்கவிருக்கிறார் என்று செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.