பிக்பாஸில் வெற்றிபெற சினேகனுக்கு சப்போர்ட் செய்யும் காயத்ரி

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியின் 100-வது நிகழ்ச்சியில் வரும் செப் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதில் வெற்றிக் கோப்பையை யார் தட்டிக் கொண்டு செல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

14 போட்டியாளர்கள் களமிறங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது சினேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம், பிந்து மாதவி, ஹரிஷ் என 5 போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர். இந்த 5 போட்டியாளர்களில் யார் வெற்றியாளர் என்பதற்கான வாக்கெடுப்பு தற்போது போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் பெரும் சர்ச்சைகளுக்கு காரணமான காயத்ரி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் வெற்றி பெறுவதற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “சினேகனுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என தெரிகிறது. எனது ஆதரவும் அவருக்கு தான். அவர் எனக்கு நல்ல நண்பர். எனக்கு பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் உறுதுணையாக இருந்திருக்கிறார். எனக்கு எப்போதுமே ஆதரவாக இருந்தவருக்கு, தற்போது நான் ஆதரவளிக்கிறேன். அவருக்கு வாக்களியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.