மீ டூ விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை இந்த பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழ் சினிமாவில் வைரமுத்து, சுசி கணேசன், அர்ஜுன் உள்ளிட்ட பலர் இந்த மீ டூ சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

இந்த மீ டூ குறித்து பிரபலங்கள் பலர் தங்களது ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையில், பிக்பாஸ் சீசன் 2இல் போட்டியாளர்களான ஜனனி, பாலாஜி ஆகியோர் மீ டூ குறித்து மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் ஜனனி இதுகுறித்து பேசுகையில், ‘மீ டூ என்பது ஒரு நல்ல விஷயம். சினிமாத்துறையில் மட்டுமின்றி எல்லாத்துறையிலும் இந்த பிரச்சனை உள்ளது. சினிமாத்துறை என்பதால் இந்த விஷயம் தலைப்பு செய்திகளில் வந்த கொண்டிருக்கின்றது.

பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னும் தைரியமாக முன்வந்து இந்த பிரச்சனை குறித்து பேச வேண்டும். அப்போதுதான் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பயம் வரும். பிரச்சனை ஏற்பட்ட உடனே காலம் தாழ்த்தாமல் தைரியமாக பேச வேண்டும். அதோபோல் மீ டூ பிரச்சனையை தவறாக யாரும் பயன்படுத்த வேண்டாம். உண்மையிலேயே பிரச்சனை ஏற்பட்டிருந்தால் மட்டும் தெரிவிக்கவும்’ என கூறினார்.

இதையடுத்து மீ டூ குறித்து ஜனனி அருகில் இருந்த பாலாஜி பேசுகையில், ‘மீ டூ என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. பெண்கள் அவர்களே அவர்களை அசிங்கப்படுத்தி கொள்வது போன்று உள்ளது. பெண்களுக்கு குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டு அவர்களையும் அவர்களை சார்ந்தவர்களையும் அசிங்கப்படுத்தி கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. மீ டூ என்பதை நாகரீகம் என நினைக்கிறார்கள். ஆனால், அது மோசமான விஷயம். மற்றவர்கள் யாரையும் பாதிக்காத வகையில் இந்த மீ டூவை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மீ டூ குறித்து பிக்பாஸ் ஜனனி, பாலாஜியின் மாறுபட்ட கருத்து திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில், பாலாஜியின் மனைவி நித்யா மீடூ விவகாரம் குறித்து சின்மயிக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.