கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மட்டுமே 282 இடங்களில் வென்று பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியில் அமர்ந்தது. பெரும்பான்மைக்கு 272 இடங்களே போதுமானது. இந்நிலையில் பல காரணங்களால் தற்போது பாஜகவின் எண்ணிக்கை மக்களவையில் 272-ஆகக் குறைந்துள்ளது.

பாஜக எம்பிக்கள் எண்ணிக்கை 282-இல் இருந்து 272-ஆகக் குறைந்ததற்கான காரணங்கள் பின்வருமாறு:-

பாஜக எம்பி கிர்தி ஆசாத் கடந்த 2015-ஆம் ஆண்டு அருண் ஜெட்லிக்கு எதிராக ஊழல் சர்ச்சையைக் கிளப்பினார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது தலைமை. மேலும் பாஜகவின் அனைத்து கொள்கை முடிவுகளையும் தற்போது எதிர்த்து விமர்சித்து வருகிறார் சத்ருகான் சின்ஹா. அவர் அதிருப்தி எம்பியாகவே பார்க்கப்படுகிறார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், துணை முதல்வர் கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் தங்கள் எம்பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து அந்த இரண்டு தொகுதிகளுக்கும் நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோற்றது.

மேலும் கர்நாடகத்தில் பாஜக எம்பிக்களாக இருந்த எடியூரப்பாவும், ஸ்ரீராமுலுவும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற நிலையில் தங்களது எம்பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் பாஜகவின் பலம் 272-ஆகக் குறைந்துள்ளது.

கூட்டணிக்கட்சிகளின் ஆதரவு மற்றும் பாஜக உறுப்பினராக வெற்றிபெற்ற சபாநாயகரின் ஆதரவை கூட்டினால் பாஜகவின் பெரும்பான்மைக்கு எந்த பிரச்சனையும் வராது. இருந்தாலும் பாஜகவின் எம்பிக்கள் பலம் 10 இடங்கள் சரிந்துள்ளது அந்த கட்சிக்கு தேசிய அளவில் கௌரவ பிரச்சனையாக உள்ளது.

இதனால் அந்த கட்சி வரும் மே 28-ஆம் தேதி மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் 4 எம்பி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை எதிர்கொண்டு தனது பலத்தை நிரூபிக்க முயலும். ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்த்தால் பாஜகவின் வெற்றி கேள்விக்குறியே. இதனால் பாஜகவின் செல்வாக்கு மேலும் குறைய வழிவகுக்கும்.