Home Blog

எனது பலத்தை நிரூபித்து காட்டுவேன்: அழகிரி ஆவேசம்!

வரும் 28-ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட உள்ளது. அன்றைய தினம் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி விரைவில் தனது பலத்தை நிரூபித்து காட்ட உள்ளதாக கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி மறைந்தார். இதனையடுத்து திமுகவின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என திமுக நிர்வாகிகள் பலரும் கூறிவருகின்றனர். ஆனால் அவருக்கு எதிராக திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவரது அண்ணன் மு.க.அழகிரி செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மு.க.அழகிரி, வருகிற செப்டம்பா் 5-ஆம் தேதி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடைபெறவுள்ள அமைதி பேரணியில் 75 ஆயிரம் பேர் முதல் 1 லட்சம் போ் வரை கலந்து கொள்வாா்கள். அதன் பின்னா் விரைவில் எனது பலத்தை நிரூபித்து காட்டுவேன் என்றார் ஆவேசமாக.

ரஜினியை சீண்டும் டிடிவி தினகரன்!

ஸ்டெர்லை போராட்டத்தின் போது ரஜினி தெரிவித்த கருத்தையும், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைக்கவில்லை என்றால் நானே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன் என ரஜினி கூறியதையும் கிண்டல் செய்யும் விதமாக அவரை சீண்டியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்த் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்காமல் முரண்டு பிடித்தது குறித்து ஆளும் கட்சியை விமர்சித்தார்.

அப்போது, மேல்முறையீடு செய்யாமல் மெரினாவில் இடம் கொடுத்தீர்கள். மேல்முறையீட்டுக்குச் சென்றிருந்தால் நானே போராட்டத்தில் ஈடுபட்டிருந்திருப்பேன் என கூறினார். இது சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராடியபோது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்றார் ஆவேசமாக.

ரஜினியின் இந்த கருத்து அப்போதே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ரஜினி நானே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பேன் என கூறியுள்ளது, அவரது முந்தைய பேச்சுக்கு முரணாக உள்ளது. இதுகுறித்து திருப்பரங்குன்றத்தில் பேசிய தினகரன், கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்காவிட்டால் நானே இறங்கி போராடி இருப்பேன் என்பவர் 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் போராட்டம் கூடாது என்றார். அவர் பேசியதை அவருக்கே அன்றும், இன்றும் என தொலைக்காட்சிகள் போட்டு காண்பிக்க வேண்டும் என்றார்.

சிறையிலிருந்து ஜெயா டிவிக்கு கடிதம் எழுதும் சசிகலா: நமது எம்ஜிஆரிலும் வெளியாகலாம்?

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள ஜெயலலிதாவின் தோழி சசிகலா தனது ஓய்வு நேரத்தில் ஜெயா டிவி உள்ளிட்ட தனக்க பிடித்தவர்களுக்கு கடிதம் எழுதி வருவதாக தகவல்கள் வருகின்றன.

சிறையில் இருக்கும் சசிகலா முன்னர் புத்தகம் படித்து தனது நேரத்தை கழிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது புத்தகம் படிப்பதை விட டிவி பார்ப்பதிலும், கடிதம் எழுதுவதிலும் சசிகலா அதிக நேரத்தை செலவழிப்பதாக கூறப்படுகிறது.

தற்போது அடிக்கடி கடிதம் எழுத ஆரம்பித்திருக்கும் சசிகலா, அதிமுக நிர்வாகிகள் சிலருக்கும், தினகரனுக்கு, ஜெயா டிவிக்கு எனப் பலருக்கும் தொடர்ந்து கடிதங்கள் எழுதியபடியே இருக்கிறாராம். சிறையில் உள்ள சசிகலாவிடம் இருந்து வரும் கடிதங்களை ஆச்சரியமாகவும் பொக்கிஷமாகவும் பார்க்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள். மேலும் சிறை விதி அனுமதித்தால், நமது எம்ஜிஆர் நாளிதழில் சசிகலாவின் கடிதத்தை தினமும் வெளியிடலாமா எனவும் ஆலோசனை நடந்துவருகிறதாம்.

நாட்டின் முதல் இந்துத்துவா நீதிமன்றம்: தலைமை நீதிபதியான சந்நியாசி!

நாட்டில் முதன் முறையாக இந்துத்துவா நீதிமன்றத்தை மீரட்டில் இந்து மகாசபையினர் அமைத்துள்ளனர். இந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சந்நியாசினியை நியமித்துள்ளனர். இந்த நீதிமன்றம் இந்து தர்மத்தையும் பெருமையையும் சீர்குலைப்பவர்களை தண்டிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம்களின் ஷரியத் நீதிமன்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த இந்துத்துவா நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்து மகாசபையின் தேசிய துணைத்தலைவர் அசோக் சர்மா ஷரியத் நீதிமன்றங்களை தடை செய்யுமாறு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அரசு அதனை நிறைவேற்றாததால் தற்போது இந்துத்துவா நீதிமன்றத்தை ஆரம்பித்துள்ளனர்.

பஞ்சாயத்து பாணியில் இயங்க உள்ள இந்த நீதிமன்றம், இந்து மதத்தின் நம்பிக்கைகள் பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் பாதிக்கப்பட்டால், அவற்றை வழக்காக தானே முன்வந்து எடுத்துக் கொள்ளும். இந்த குற்றங்களை செய்வது பிரதமராக இருந்தாலும், முதல்வராக இருந்தாலும் அவர்களுக்கு சம்மன் அனுப்புவோம். தண்டனைகளில் மரண தண்டனையும் அடங்கும். எங்களது தன்னார்வத்தொண்டர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அமல்படுத்துவார்கள் என இந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி 36 வயதான சந்நியாசினி பூஜா சகுன் பாண்டே தெரிவித்துள்ளார்.

பாஜகவினர் ரகளை: பேட்டியை பாதியிலேயே நிறுத்திய தமிழிசை!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை முன்னிலையில் தமிழக பாஜகவினர் செய்தியாளர்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் தனது பேட்டியை தமிழிசை பாதியிலேயே நிறுத்திவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.

நேற்று சென்னை திருமுல்லைவாயிலில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக தமிழக தலைவர் தமிழிசை பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கேரள வெள்ளம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார். அப்போது பாரத் மாதா கி ஜே என பாஜக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.

இதனால் செய்தியாளர்கள் சந்திப்பில் இடையூறு ஏற்படுவதாக செய்தியாளர்கள் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள், செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உங்களை யார் வர சொன்னா என மாவட்ட நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களை தரக்குறைவாக பேசியுள்ளார்.

இதனையடுத்து தமிழிசை தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார். ஆனாலும் பாஜகவினர் மீண்டும் செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பொறுமையிழந்த தமிழிசை தனது பேட்டியை பாதியிலேயே நிறுத்திவிட்டு புறப்பட்டு சென்றார். இதனையடுத்து செய்தியாளர்கள் பாஜகவினர் மீது திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

உலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம்: எச்சரிக்கும் நிபுணர்கள்!

கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழகத்தை சுனாமி தாக்கும் வரை சுனாமி என்ற பெயரையே நான் கேட்டதில்லை. தற்போது சுனாமி எச்சரிக்கை என்றால் கடலோர மக்கள் நடுங்கும் அளவுக்கு அது கோர தாண்டவம் ஆடியுள்ளது. உடன் இருந்தவர்களையும், உடமைகளை இழந்த அவர்களுக்கு சுனாமி என்றுமே மாறாதா சோக வடு.

இந்நிலையில் காலநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்வடைந்து வருவதாகவும், இதனால் உலகம் முழுவதையும் சுனாமி தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள வர்ஜீனியா தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் ராபர்ட் வெயிஸ் தலைமையிலான நிபுணர்கள் குழு, காலநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அந்த கட்டுரை அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.

அதில், தற்போது காலநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் கொஞ்சம் உயர்ந்துள்ளது. தெற்கு சீனாவிலுள்ள மகாவ் கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதிக அளவில் மக்கள் வாழும் சீனாவில் இதனால் 8.8 ரிக்டரில் அளவில் நிலநடுக்கம் ஏற்பட அபாயம் உள்ளது. இதனால் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளது என அந்த கட்டுரை தெரிவிக்கிறது.

மேலும், தெற்கு சீனக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து தொடங்கி, தெற்கு தைவான் வழியாக உலகம் முழுவதையும் சுனாமி தாக்கும் அபாயம் உள்ளது என்று தங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளதாக நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினகரனுக்கு டாட்டா காட்டிய நாஞ்சில் சம்பத் தற்போது திவாகரன் கட்சியில்?

சிறந்த பேச்சாளரான நாஞ்சில் சம்பத் தினகரனிடம் இருந்து வெளியேறி தற்போது திவாகரன் கட்சியில் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

மதிமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த நாஞ்சில் சம்பத் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா அணியில் இருந்தார். தினகரனை கடவுள் ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளிய நாஞ்சில் சம்பத், தினகரன் கட்சி ஆரம்பித்ததும் அதில் திராவிடம் இல்லையென்று தினகரனுக்கு டாட்டா காட்டிவிட்டு கிளம்பினார்.

இதனையட்டுத்து நாஞ்சில் சம்பத் மீண்டும் வைகோவிடமே செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது எதிர்பாராத திருப்பமாக சென்னையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நடத்திய பட்டிமன்றம் ஒன்றில் இன்று நடுவராகப் பங்கேற்றுப் பேசியிருக்கிறார் நாஞ்சில் சம்பத். திவாகரன் தினகரனுக்கு எதிராக அரசியல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டிமன்ற விழாவில் திவாகரனைப் புகழ்ந்து தள்ளிவிட்டாராம் நாஞ்சில் சம்பத். கூட்டத்துக்கு வரும்போதும், போகும்போதும் திவாகரன் கட்சிக் கொடி கட்டிய காரில்தான் பயணித்திருக்கிறார் நாஞ்சில் சம்பத். அண்ணாவும், திராவிடமும் திவாகரன் கட்சியில் மட்டும்தான் இருக்கிறது என்று பேச ஆரம்பித்திருக்கிறார் அவர். நேரடியாக இதுவரை பேச ஆரம்பிக்காத நாஞ்சில் சம்பத் விரைவில் திவாகரன் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

இளைஞரின் ஆணுறுப்பை பிளேடால் வெட்டிய நண்பர்: சரக்கடிப்பதில் தகராறு!

சென்னையில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவரின் ஆணுறுப்பை அவரது நண்பர் பிளேடால் வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. அந்த நண்பரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை கொளத்தூர் அருகே உள்ள ராஜமங்களம் டாஸ்மாக் கடையில் மூர்த்தி மற்றும் சரவணன் என்ற இருவர் இரவு மது அருந்த சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாய் தகராறை அடுத்து இருவரும் மாறி மாறி தாக்க ஆரம்பித்துள்ளனர். இதில் சரவணன் பலமாக தாக்கியதில் மூர்த்தி ரத்தம் வழிய கீழே விழுந்துள்ளார்.

ஆனாலும் மூர்த்தி சரவணனை தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் சட்டைப் பையில் வைத்திருந்த பிளேடை எடுத்து மூர்த்தியின் ஆணுறுப்பை அறுக்க தொடங்கினார். வலியால் மூர்த்தி அலற அருகில் உள்ளவர்கள் வந்து சரவணனை காவல்துறையிடம் பிடித்து கொடுத்தனர்.

இதனையடுத்து ராஜமங்களம் காவல்துறையினர் சரவணனை விசாரித்ததில், மது அருந்தும் போது, அதை சரியாக பகிராததால் மூர்த்தியை தாக்கி அவரது ஆணுறுப்பை வெட்டியதாக ஒப்புக்கொண்டுள்ளார் சரவணன். ஏற்கனவே பண விவகாரத்தில் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

16000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள்; 47000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்: அதிர்ச்சியளிக்கும் அறிக்கை!

கேரளாவில் கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு அம்மாநிலத்தையே புரட்டிப் போட்டது. ஒட்டுமொத்த மாநிலத்தைய்யே மறுசீரமைக்கும் நிலையில் உள்ளது. மேலும் கர்நாடகாவில் வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 16000 பேர் வெள்ளத்தால் உயிரிழப்பார்கள் என தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இந்தியாவில் வெள்ளப் பாதிப்புகளை அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, எளிதாகப் பேரிடர்களை முன்கூட்டியே கணித்து அறிவிக்க முடியும். ஆனால், வெள்ளம் வருவதை முன்கூட்டியே தடுக்க முடியாது. பெரும்பாலான கட்டடங்கள், சாலைகள், வீடுகள் வெள்ளத்தைத் தாங்கும் வகையில் உறுதியாகக் கட்டப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், நகரமயமாக்கல் காரணமாகப் பெரிய சேதங்கள் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்தியாவில் அடுத்த 10 வருடங்களில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள். இதனால் 47,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளது. இதைத் தடுக்க இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்: முதல் கூட்டம் பிரம்மாண்டம்!

வரும் 28-ஆம் தேதி திமுக பொதுக்குழு கூடவுள்ளது. அன்றைய தினம் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். மேலும் மு.க.ஸ்டாலின் தலைவர் ஆன பின்னர் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளது.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி காலமானார். பின்னர் திமுக செயற்குழு கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டது. கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்க கூட்டப்பட்ட அந்த கூட்டத்தில் பேசிய துரைமுருகன், விரைவில் தலைவராக உள்ள செயல் தலைவர் ஸ்டாலின் என குறிப்பிட்டு பேசினார். மேலும் ஸ்டாலின் தலைவராக வேண்டும் என பல நிர்வாகிகள் பேசினர்.

திமுகவின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என பல மாவட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் திமுக பொதுக்குழு கூட்ட தேதியை அறிவித்துள்ளார் பொதுச்செயலாளர் க.அன்பழகன்.

அவர் வெளியிட்ட அறிவிப்பில், கழக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 28.08.2018 செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். தலைவர் மற்றும் பொருளாளர் தேர்தல் தொடர்பாகவும், தணிக்கை குழு அறிக்கை தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என கூறப்படுகிறது. மேலும் மு.க.ஸ்டாலின் தலைவர் ஆன பின்னர் அகில இந்திய தலைவர்களை வரவழைத்து மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

சமூகவலைதள பக்கங்களில் இணைய

7,614FansLike
587FollowersFollow
11FollowersFollow
416FollowersFollow
92SubscribersSubscribe