தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை சமூக விரோதிகள் என நடிகர் ரஜினிகாந்த் இழிவாக பேசியதற்காக அவர் மீது கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை சந்திக்க சென்ற ரஜினிகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாலேயே கலவரம் ஏற்பட்டதாகவும், போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததாகவும், அவர்களால் தான் கலவரம் ஏற்பட்டதாகவும், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சமூக விரோதிகள் புகுந்ததாக கூறினார்.

இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்களைப் பற்றித் தவறான கருத்து தெரிவித்ததாக ரஜினிகாந்த் மீது ஓசூர் காவல் நிலையத்தில் சிலம்பரசன் என்பவர் புகார் அளித்தார். ஆனால் அவரது புகார் மீது வழக்கு பதிவு செய்யப்படாததையடுத்து, ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சிலம்பரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் வர உள்ளது.