திமுக தலைவர் கருணாநிதி இறந்த பின்னரும் தன்னை அடக்கம் செய்ய மெரினாவை போராடி வென்றிருக்கிறார். இறந்த பின்னரும் போராடி வெற்றிபெற்றிருக்கிறார் அவர். இது திமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி கொண்டாட வைத்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக உடல்நலிவுற்று உறுப்புகள் செயலிழந்து தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் நேற்று காலமானார். அவரை மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்ய வேண்டும் என திமுகவினர் அரசை கேட்டனர். ஆனால் அரசு அதற்கு அனுமதி மறுத்தது. கருணாநிதி மீது ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சட்ட சிக்கல் உள்ளதாக கூறியது அரசு.

இது திமுகவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அரசின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியது திமுக. இதில் அரசுக்கும் திமுக தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. கருணாநிதிக்கு இடம் ஒதுக்குவதுக்கு தடையாக இருந்த வழக்குகளை வாபஸ் பெற்றனர் அந்த மனுதாரர்கள்.

ஆனாலும் அரசு தரப்பு வேறு காரணங்களை கூறி கருணாநிதிக்கு இடம் ஒதுக்க முடியாது என பிடிவாதமாக இருந்தது. ஆனாலும் விட்டுக்கொடுக்காமல் அதிரடியான வாதங்களை திமுக தரப்பு பதில் வாதமாக வைத்தது. இறுதியில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற அதிரடி தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர்.

இந்த தீர்ப்பை எதிர் நோக்கியிருந்த திமுகவினருக்கு இந்த உத்தரவு பெரும் நிம்மதியையும், மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர்கள் இந்த உத்தரவை கொண்டாடினார்கள். தங்கள் தலைவர் மரணத்திற்கு பின்னர் கூட வென்று காட்டிருக்கிறார் என அவர்களை கொண்டாட வைத்துள்ளது கலைஞரின் மரணம். அது தான் தலைவர் கலைஞர்.