மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடிக்கும் சிம்புவுக்கு ஜோடியாக மாடல் அழகி டயானா எரப்பா என்பவர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்து அதன் போஸ்டரை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

மணிரத்தினம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் அருண் விஜய், அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா,மன்சூர் அலிகான் என பிரமாண்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அதுமட்டுமல்ல, இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கின்றனர்.

இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. செப்டம்பர் 28-ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தில் வரும் பிரபலங்களின் கதாப்பாத்திரங்களை படக்குழு அறிவித்து வருகிறது. இப்படத்தில் வரதனாக அரவிந்த்சாமியும், ரசூலாக விஜய்சேதுபதியும், தியாகுவாக அருண் விஜய்யும், நடிகர் சிம்பு எத்தி என்னும் கதாப்பாத்திரத்தில் வருவதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் கதாநாயகிகளின் கதாபாத்திர போஸ்டர்களும் தற்போது வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. ஹீரோக்களில் ஒருவரான சிம்புவுடன் இணைந்து பிரபல மாடல் அழகி டயானா எரப்பா புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அவர் சாயா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் படக்குழு ட்விட்டரில் தெரிவித்துள்ளது.