சமீபத்தில் நடந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் மற்ற நீதிபதிகள் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆளுநர் ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின தேநீர் விருந்தை நீதிபதிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர்.

கடந்த 12-ஆம் தேதி சென்னை உஅய்ர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமணி பதவி ஏற்றார். அந்த பதவியேற்பு விழாவின்போது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அமைச்சர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு அடுத்தபடியாக பின்வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்தனர். அரசியலமைப்புச் சட்ட பேராளர்களான நீதிபதிகளுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்குமான படிநிலை வரிசை ஆளுநர் மாளிகை அதிகாரிகளுக்குத் தெரியாதா? அல்லது அமைச்சர்களுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் கீழானவர்கள்தான் நீதிபதிகள் என்பதுதான் அவர்களின் புரிதலா? என வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்தார் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்.

இந்நிலையில் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தேசிய கொடியை ஏற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அதன் பின்னர் மாலையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் அவர். இதில் முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். ஆனால் இதில் அழைப்பு விடுக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆளுநரின் விருந்தை புறக்கணித்தனர்.