11-வது ஐபிஎல் சீசனின் பிளே ஆஃப் சுற்றுகள் நேற்று ஆரம்பித்தது. இதன் முதல் பிளே ஆஃப் மேட்சில், லீக் போட்டிகளில் விளையாடி முதல் இரண்டு இடங்களை பிடித்த ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகள் மோதின. இதில் டாஸ் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களம் இறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சென்னை அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பதில் அதிரடி ஆட்டக்காரர் தவான் சஹர் பந்துவீச்சில் விக்கெட்டுகள் சிதற ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த அனைத்து வீரர்களும் வரிசையாக நடையை கட்டினர். இறுதியாக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணிக்கு 140 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஹைதராபாத் அணியில் ப்ராத்வெயிட் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி 43 ரன்களையும் வில்லியம்சன், பதான் ஆகியோர் தலா 24 ரன்கள் அடித்தனர். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். சென்னை அணியில் பிராவோ 2 விக்கெட்டுகளையும், சாஹர், இங்கிடி, தாகுர், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன் பின்னர் 140 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரில் வாட்சனின் விக்கெட்டை புவனேஸ்வர் கைப்பற்ற ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. சென்னை அணி ரன் அடிக்க மிகவும் சிரமப்பட்டது. ஹைதராபாத் அணி விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக பந்துவீசி ஆட்டத்தை கடைசி வரை பரபரப்பாக இழுத்து சென்றது.

கடைசியில் ஃபாப் டுபிளசியின் அபார ஆட்டத்தால் சென்னை அணி 19.1 ஒவரில் வெற்றி இலக்கை அடைந்து அதிரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. சென்னை அணியில் டுபிளசி்ஸ் 67 ரன்கள் ரெய்னா 27 ரன்கள் மற்றும் தாகுர் 15 ரன் அடித்தனர். மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். ஹைதராபாத் அணியை பொறுத்தவரை ரஷித் ஹான், சந்தீப் ஷர்மா, கௌவுல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டையும், புவனேஸ்வர் குமார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.