சென்னை கிண்டியில் இளம் பெண்ணிடம் செல்போனைப் பறித்து வாகனத்தை எட்டி உதைத்துவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருபவர் தேவி (29). இவர் அடையாறு காமராஜர் நகர் முதல் அவென்யூவில் தனியார் பெண்கள் விடுதியில் தங்கியுள்ளார்.

தேவி வழக்கம்போல் நேற்று முன் தினம் இரவு பணி முடித்து இரவு 10 மணி அளவில் அடையாறில் உள்ள விடுதிக்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ராஜ்பவன் வழியாக சர்தார் படேல் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவர் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் அவர் கையிலிருந்த ரெட்மி செல்போனைப் பறித்தனர். ஓடும் வாகனத்தில் செல்போனைப் பிடுங்கிய அவர்களிடம் தேவி போராடியபோது அந்த நபர்கள் ஆத்திரத்துடன் தேவியின் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்தனர்.

இதனால் தேவி நிலைதடுமாறி ஓடும் வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். அவரைக் கீழே தள்ளிவிட்ட அந்த நபர்கள் செல்போனுடன் மாயமானார்கள். ஓடும் வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த தேவியை அவ்வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

கீழே விழுந்ததில் முகம், கை, கால், நெற்றியில் காயம் ஏற்பட்ட தேவி சிகிச்சைக்குப் பின் விடுதிக்குத் திரும்பிச் சென்றார். இதுகுறித்து நேற்று காலை தேவி கோட்டூர்புரம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.